

கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் திமுக வேட்பாளராக, கார்த்திகேய சிவசேனாபதி போட்டியிடுகிறார். இவர், தனது தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். கார்த்திகேய சிவசேனாபதி தொண்டாமுத்தூர் தெற்கில் உள்ள பூலுவபட்டி சந்தை, செல்வபுரம் தெலுங்குபாளையம் பிரிவு, புதூர், புதூர் புது நகர், தென்னமநல்லூர், ஆலாந்துறை உள்ளிட்ட இடங்களில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது பொதுமக்கள் தனக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற வைக்க வேண்டும் என பிரச்சாரம் மேற்கொண்டார். பொதுமக்களிடம் துண்டுப்பிரசுரங்களை விநியோகித்து வாக்கு சேகரித்தார். அதேபோல், தொண்டாமுத்தூர் வடிவேலாம்பாளையத்தில் ஒரு ரூபாய்க்கு இட்லி விற்பனை செய்யும் கடை நடத்தி வரும் மூதாட்டி கமலாத்தாளின் கடையில் இட்லி சாப்பிட்டார்.
பிரச்சாரத்தின் போது கார்த்திகேய சிவசேனாபதி பேசும்போது, ‘‘தொண்டாமுத்தூர் தொகுதியில் நான் வெற்றி பெற்றால், தட்டுப்பாடற்ற, சீரான முறையில் குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுப்பேன். மக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து தருவேன். பொதுமக்கள் தெரிவிக்கும் அனைத்து புகார்களையும் உடனடியாக நிவர்த்தி செய்து தருவேன்,’’ என்றார்.
வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாபதிக்கு ஆதரவாக, திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நேற்று தொண்டாமுத்தூரில் பிரச்சாரம் மேற்கொண்டார். உதயநிதி ஸ்டாலின் பேசும்போது, ‘‘மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கொண்டு வந்ததாக அதிமுகவினர் பெருமையாக கூறுகின்றனர். ஆனால், நான் மதுரைக்கு பிரச்சாரத்துக்குச் சென்ற போது, அங்கு சென்று பார்த்தேன். ஒன்றும் இல்லை. மதுரைக்கு கட்டிக் கொடுத்த எய்ம்ஸ் மருத்துவமனைக்கான செங்கல்லை கையோடு எடுத்து வந்துள்ளேன். வாக்குப்பதிவு முடிந்த அடுத்த நாள் இந்த மருத்துவமனையை அவர்களிடம் ஒப்படைத்து விடுகிறேன் எனக் கூறிவிட்டேன்.
வாக்குப்பதிவுக்கு இன்னும் மூன்று நாள் தான் உள்ளது. இப்பகுதி பொதுமக்கள் தங்களது வாக்குகளை உதயசூரியன் சின்னத்துக்கு வாக்களித்து திமுக வேட்பாளரை வெற்றி பெற வைக்க வேண்டும்,’’ என்றார்.