மும்முனைப் போட்டி நிலவும் பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி

மும்முனைப் போட்டி நிலவும் பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி
Updated on
1 min read

தருமபுரி மாவட்டத்தில் மும் முனைப் போட்டி நிலவும் பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் சூடு பறந்து கொண்டிருக்கிறது.

தருமபுரி மாவட்டத்தில் பாலக்கோடு, பென்னாகரம், தருமபுரி, பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் என 5 சட்டப் பேரவை தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகள் ஒவ்வொன்றிலும் திமுக அணி, அதிமுக அணி, அமமுக அணி, நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம் என 5 கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் போட்டியில் உள்ளனர். அனைத்து வேட்பாளர்களுமே வெற்றி என்பதை இலக்காகக் கொண்டு அவரவர் தொகுதிக்குள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இருப்பினும், பாப்பிரெட்டிப் பட்டி நீங்கலான 4 தொகுதிகளிலும் திமுக-அதிமுக அணிகளுக்கு இடையில் தான் பிரதான போட்டி நிலவுகிறது. பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியில் மட்டும் இம்முறை மும்முனைப் போட்டி நிலவுகிறது. இந்த தொகுதியில் திமுக வேட்பாளர் பிரபு ராஜசேகர் போட்டியிடுகிறார். அதிமுக வேட்பாளரும், தொகுதியின் தற்போதைய எம்எல்ஏ-வுமான கோவிந்தசாமி போட்டியிடுகிறார். அமமுக சார்பில் முன்னாள் உயர் கல்வித்துறை அமைச்சரும் அமமுக-வின் துணைப் பொதுச் செயலாளரும், தருமபுரி மேற்கு மாவட்ட செயலாளருமான பழனியப்பன் போட்டியிடுகிறார். எனவே, இந்த தொகுதி மும்முனைப் போட்டி நிலவும் தொகுதியாக உள்ளது.

ஒருபுறம் கோடை வெயில் அனல் பரப்பிக் கொண்டிருக்க, மற்றொரு புறம் இந்த 3 கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்களும், அவர்களின் ஆதரவாளர்களும் தொகுதிமுழுக்க அனல் பரப்பும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திமுக வேட்பாளர் பிரபுராஜசேகர் முன்னாள் திமுக சட்டப் பேரவை உறுப்பினர் மனோகரனின் மகன். கடந்த 2016 சட்டப் பேரவை பொதுத் தேர்தலில் இதே தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை நழுவ விட்டவர். அதிமுக வேட்பாளர் கோவிந்தசாமி 2019-ல் நடந்த இடைத் தேர்தலில் திமுக வேட்பாளரை விட 18 ஆயிரம் வாக்குகள் கூடுதலாகப் பெற்று வெற்றி பெற்றார். அமமுக வேட்பாளர் பழனியப்பன் மொரப்பூர் தொகுதியில் 1 முறை வென்றுள்ளார். தொகுதி மறுசீரமைப்பில் மொரப்பூர் தொகுதி பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியாக மாற்றப்பட்டது. இந்த தொகுதியில் முதல் முறை வென்று அமைச்சர் ஆனார். அடுத்தமுறை வென்றபோது அதிமுக-வில் ஏற்பட்ட பிளவால் எம்எல்ஏ- பதவியை இழக்கும் நிலை உருவானது. தொகுதி வாக்காளர்கள் மத்தியில் தனக்கென கணிசமான செல்வாக்கை கொண்டுள்ளவர். இவ்வாறு தொகுதியில் மும்முனை போட்டியை உருவாக்கி இருக்கும் 3 முக்கிய வேட்பாளர்களால் தொகுதிக்குள் பிரச்சாரக் களம் சூடேறிக்கிடக்கிறது. இவர்கள் தவிர, நாம்தமிழர், மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்களும் அவர்கள் பங்குக்கு பிரச்சாரக் களத்தில் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கின்றனர்.

எனவே, இவர்களில் வெற்றிக் கனியை பறிக்கப் போவது யார் என்பது குறித்து டீக்கடைகள், பேருந்துகள், சந்தைகள் உள்ளிட்ட பொது இடங்களில் தினமும் வாக்காளர்கள் மத்தியில் நடைபெற்று வரும் விவாதக் களமும் சூடாகக் காணப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in