

அமைந்தகரை மேத்தா நகர் ஸ்ரீயோக ஆஞ்சநேயர் கோயிலில் கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
சென்னை அமைந்தகரை மேத்தா நகர் அவ்வையார் தெருவில் உள்ள யோக ஆஞ்சநேயர் கோயிலில் 12 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டன. திருப்பணிகள் அனைத்தும் முடிந்த நிலையில், கடந்த 31-ம் தேதி பூமி பூஜை நடத்தப்பட்டது. 1-ம் தேதி யாகசாலையை சுத்தம் செய்து யாகங்கள் நடைபெற்றன. பிறகு, கோ பூஜை செய்யப்பட்டு மகா சாந்தி திருமஞ்சனமும், பள்ளியறை சேவையும் நடைபெற்றது.
நேற்று காலை 7 மணி அளவில் விஸ்வரூபம், ஹோமங்கள் நடத்தப்பட்டன. காலை 8.30 மணி அளவில் மகா பூர்ணாஹுதி நடைபெற்றது. தொடர்ந்து, யாத்ராதானம், தசதானம், கும்ப புறப்பாடு ஆகியவை நடைபெற்றன.
காலை 9.40 மணி அளவில் கோயில் விமானத்துக்கு புனிதநீரைக் கொண்டு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. கோயில் முன்பு திரண்டிருந்த ஏராளமான பக்தர்கள் ‘ராம ராம’ என்றும் ‘ஜெய் ஆஞ்சனேயா’ என்றும் பக்திப் பெருக்குடன் கோஷமிட்டு, கும்பாபிஷேகத்தை தரிசித்தனர்.
இதையடுத்து, ஆஞ்சனேய சுவாமிக்கு மகா தீபாராதனை நடந்தது. பின்னர், பக்தர்கள் சுவாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். ஏராளமானோர் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.
மாலை 6 மணிக்கு சுவாமி புறப்பாடு நடைபெற்றது. வீதி உலா வந்த சுவாமியை ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.
கும்பாபிஷேக விழா ஏற்பாடுகளை யோக ஆஞ்சநேயர் கோயில் தலைவர் சாரங்கபாணி, புதுச்சேரி அடுத்த பஞ்சவடி ஆஞ்சநேயர் கோயில் தலைவர் கே.கோதண்டராமன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.