

ஆவடி தொகுதி திமுக வேட்பாளர் சா.மு.நாசரை ஆதரித்து நேற்று முன்தினம் இரவு திருமுல்லைவாயல், ஆவடி பகுதிகளில் நாஞ்சில் சம்பத் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது:
வாக்கு என்பது ஆயுதத்தைக் காட்டிலும் வலிமையானது. தமிழகத்தில் காலூன்ற பாசிச கும்பல் துடிக்கிறது. மணிப்பூர், மேகாலயா, கோவா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், காஷ்மீர் மாநிலங்களைப்போல தமிழகத்திலும் விளையாடலாம் எனக் கருதுகிறது. ஆனால், அவர்களது எண்ணம் பலிக்காது என்பதை வரும் சட்டப்பேரவைத் தேர்தல் நிரூபிக்கும்.
அதிமுக- பாஜக கூட்டணி என்பது முரண்பட்டது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, "நான் உயிரோடு இருக்கும்வரை பாஜகவுடன் ஒட்டும் கிடையாது, உறவும் கிடையாது" என்று கூறினார். ஆனால், முதல்வர் கே.பழனிசாமி அதிமுகவுடன் உறவு வைத்ததுமட்டுமின்றி, தமிழகத்தின் உரிமைகளை விட்டுக்கொடுத்துவிட்டார்.
தமிழக அரசுக்கு ரூ.5.70 லட்சம் கோடி கடன் உள்ளது. அதற்கு வட்டி மட்டும் ரூ.33 ஆயிரம் கோடியாகும். ஆனால், `வெற்றி நடைபோடும் தமிழகம்' என்று தினமும் விளம்பரம் செய்கின்றனர்.
இவ்வாறு நாஞ்சில் சம்பத் பேசினார்.