Published : 03 Apr 2021 03:14 AM
Last Updated : 03 Apr 2021 03:14 AM

செங்கல்பட்டு மாவட்ட தலைநகரை கைப்பற்றப்போவது அதிமுகவா, திமுகவா?

செங்கல்பட்டு மாவட்டத்தின் தலைநகர் தொகுதியை கைப்பற்ற அதிமுக - திமுக இடையே கடும் போட்டி நிலவுகிறது.

செங்கல்பட்டு தொகுதியில் அதிமுக சார்பில் கஜேந்திரன், திமுக சார்பில் ம.வரலட்சுமி, அமமுக சார்பில் சதீஷ்குமார், மநீம கூட்டணியில் இந்திய ஜனநாயக கட்சியின் முத்தமிழ்செல்வன், நாம் தமிழர் கட்சியில் சஞ்சீவிநாதன் உட்பட 13 பேர் போட்டியிடுகின்றனர்.

இங்கு கடந்த 1957-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை நடந்த தேர்தல்களில் திமுக 6 முறையும், அதிமுக 4 முறையும், பாமக 2 முறையும், காங்கிரஸ், தேமுதிக தலா ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன.

இத்தொகுதி மறைமலைநகர், செங்கல்பட்டு நகராட்சி, நந்திவரம்-கூடுவாஞ்சேரி பேரூராட்சி மற்றும் காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றியத்தை உள்ளடக்கியது. மண்ணிவாக்கம், நெடுங்குன்றம், வேங்கடமங்கலம் உள்ளிட்ட 39 ஊராட்சிகளும் உள்ளன.

கார் உற்பத்தி தொழிற்சாலைகள், வாகன உதிரிபாகம் தயாரிக்கும் ஆலைகள், அரசு, தனியார் மருத்துவ மற்றும் பொறியியல் கல்வி நிறுவனங்கள் அதிகம் உள்ளன. பன்னாட்டு தொழிற்சாலைகள் அடங்கிய, தொழில் வளம் மிக்க தொகுதி செங்கல்பட்டு. மகேந்திரா வேர்ல்டு சிட்டி, மறைமலைநகர் தொழிற்பேட்டை இங்கு உள்ளன.

வண்டலூர் அருகில் கிளாம்பாக்கம் பகுதியில் புறநகர் பேருந்து நிலையம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. செங்கல்பட்டில் சர்வதேச யோகா மற்றும் இயற்கை மருத்துவ அறிவியல் மையம் ரூ.60 கோடியில் அமைக்கப்படுகிறது. ரூ.119 கோடியில் அனைத்துத் துறைகளும் அமையும் வகையில் புதிய ஆட்சியர் அலுவலகம் கட்டப்படுகிறது. சுற்றுலாப் பயணிகளை கவரும் வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா உள்ளது.

செங்கல்பட்டு சுற்றுவட்டாரப் பகுதிகளில் பாலாறு பாயும் இடங்களில் அதிக அளவு விவசாயம் நடைபெறுகிறது. இத்தொகுதியில் வன்னியர், முதலியார், தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பெருமளவு உள்ளனர்.

செங்கல்பட்டு நகரத்துக்கு பொழுது போக்கு பூங்கா, பாதாள சாக்கடைத் திட்டம், செங்கல்பட்டு நகராட்சியில் அருகில் உள்ள ஊராட்சிகளை இணைத்து பெரு நகராட்சியாக மாற்றுதல், செங்கல்பட்டு நகர சாலை விரிவாக்கம், கொளவாய் ஏரி படகு போக்குவரத்து, சுற்றுலாத்தலம் அமைத்தல் போன்ற தேவைகள் பல ஆண்டுகளாக நிறைவேற்றப்படாமல் உள்ளன.

இந்த தொகுதியை பொறுத்தவரை அதிமுக - திமுக இடையேதான் கடும் போட்டி நிலவுகிறது.

"காஞ்சிபுரத்தை பிரித்து செங்கல்பட்டு மாவட்டம் தொடங்கப்பட்டது, பாலாற்றில் தடுப்பணை கட்டப்பட்டது, செங்கல்பட்டு தாலுகாவை இரண்டாக பிரித்து வண்டலூர் தாலுகா உருவாக்கப்பட்டது. வண்டலூரில் மேம்பாலம் கட்டப்பட்டது, தேசிய நெடுஞ்சாலை 8 வழி சாலையாக மாற்றும் பணி நடைபெற்று வருவது, செங்கல்பட்டு நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டம் தொடங்க அரசாணை வெளியிடப்பட்டது" உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் அதிமுக ஆட்சியில் செய்யப்பட்டுள்ளன என அதிமுக வேட்பாளர் கஜேந்திரன் எடுத்துக்கூறி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

ஆனால் திமுக தரப்போ, "எங்கள் கோரிக்கையை ஆளுங்கட்சியினர் நிறைவேற்றவே இல்லை. கிளாம்பாக்கத்தில் மேம்பாலம், சிங்கபெருமாள் கோவில் மேம்பாலம் முடிக்கப்படாமல் பல ஆண்டுகளாக கிடப்பில் உள்ளன. செங்கல்பட்டு நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டம் கொண்டுவரவே இல்லை’’ என பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். மேலும், ‘‘சட்டப்பேரவையில் மக்கள் பிரச்சினைகளை பேசியும், அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை" என்கின்றனர்.

செங்கல்பட்டு மாவட்டத்தின் தலைநகரான செங்கல்பட்டு தொகுதி விளங்குகிறது. இத்தொகுதியை யாரிடம் ஒப்படைப்பது என வாக்காளர்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x