Published : 03 Apr 2021 03:14 AM
Last Updated : 03 Apr 2021 03:14 AM

சென்னையின் நட்சத்திர தொகுதியான ஆயிரம் விளக்கை கைப்பற்ற திமுக - பாஜக தீவிரம்

ஆயிரம் விளக்கு தொகுதியைக் கைப்பற்றும் முயற்சியில் திமுக, பாஜக ஆகிய கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

சென்னை மாவட்டத்தில் உள்ளதொகுதிகளில் ஆயிரம் விளக்குதொகுதிக்கென பல தனித்தன்மைகள் உண்டு. மறைந்த முன்னாள் முதல்வர்களான கருணாநிதி, ஜெயலலிதா, காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர்களில் ஒருவரான ப.சிதம்பரம், நடிகர் ரஜினிகாந்த் என பல பிரபலங்கள் இந்த தொகுதியைச் சேர்ந்தவர்கள்.இதனால் இத்தொகுதி நட்சத்திர அந்தஸ்தைப் பெற்றுள்ளது. ஆயிரம் விளக்கு தொகுதியில் இதுவரை நடைபெற்ற 13 தேர்தல்களில் 9 முறை திமுகவும், 4 முறை அதிமுகவும் வெற்றி பெற்றுள்ளன. 1989, 1996, 2001 மற்றும் 2006-ம்ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் ஆயிரம் விளக்கு தொகுதியில் இருந்துதான் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு சட்டப்பேரவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட கு.க.செல்வம் வெற்றி பெற்றார். அவர் தற்போது பாஜகவில் இணைந்துள்ளார்.

ஆயிரம் விளக்கு தொகுதியில் திமுக சார்பில் டாக்டர் நா. எழிலன் களம் இறங்கியுள்ளார். பாஜக சார்பில் பிரபல நடிகை குஷ்புஇந்த தொகுதியில் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சி சார்பில் ஏ.ஜே.செரின், மக்கள் நீதி மய்யம் சார்பில் கே.எம்.செரிப், அமமுக சார்பில் என்.வைத்தியநாதன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

பாஜக சார்பில் போட்டியிடும் குஷ்பு, பிரபல நடிகை என்பதால், பிரச்சாரத்துக்கு செல்லும்இடங்களிலெல்லாம் அவரைக்காண்பதற்காக மக்கள் பெருமளவில் திரள்கிறார்கள். பெண்கள்நலன் சார்ந்த திட்டங்களை முன்வைத்து அவர் பிரச்சாரம் செய்து வருகிறார். கூட்டணிக் கட்சிகளான அதிமுக, பாமகவும் குஷ்புவுடன் இணைந்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன.

திமுக சார்பில் போட்டியிடும் டாக்டர் நா.எழிலன், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நெருங்கிய நண்பரும், தமிழகஅரசின் முன்னாள் திட்டக் குழுத்துணை தலைவருமான பேராசிரியர் மு.நாகநாதனின் மகன் ஆவார்.கருணாநிதி உடல் நலிவுற்றிருந்த காலத்தில், அவரை அருகில் இருந்து கவனித்துக் கொண்டவர்களில் டாக்டர் எழிலனும் ஒருவர். அதனால் எழிலனை வெற்றி பெற வைக்க வேண்டும் என்ற முனைப்பில் திமுகவினர் தீவிரமாக களப்பணியாற்றி வருகிறார்கள். மிகவும் எளிமையான நபரான டாக்டர் எழிலன், தொகுதியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் நடந்தே சென்று வாக்கு சேகரித்து வருகிறார்.

அமமுக வேட்பாளரான என்.வைத்தியநாதன், மேள தாளம் முழங்க, பட்டாசு வெடித்து பிரச்சாரத்தில் அசத்தி வருகிறார். அதேபோல் நாம் தமிழர், மக்கள்நீதி மய்யம், பகுஜன் சமாஜ் உள்ளிட்ட கட்சிகளின் வேட்பா ளர்களும் தொகுதியில் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். எனினும் திமுக - பாஜக வேட்பாளர்களுக்கு இடையேதான் கடுமையான நேரடி போட்டி நிலவுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x