

தமிழகத்தில் பாஜக காலூன்ற முடியாததற்கு நம் தமிழ் மொழியுணர்வே முக்கிய காரணியாகதிகழ்வதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.
திட்டக்குடி தனி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சி.வெ.கணேசனை ஆதரித்து நேற்று திட்டக்குடியை அடுத்த கழுதூரில்விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது அவர் பேசியது:
விடுதலைச்சிறுத்தைகளுக்கு முதன் முதலில் அங்கீகாரம் கொடுத்த மங்களுர் தொகுதி தான் திட்டக்குடியாக உருவெடுத் திருக்கிறது.
நான் முதன் முதலாக மங்களூர்தொகுதியில் போட்டியிட்ட போது எனது வெற்றிக்காக பாடுபட்டவர் கணேசன். அவரை பெருவாரியான வாக்குகள்வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்யவேண்டும். நமது தேவைகளை பூர்த்தி செய்யக் கூடியவர்.
எக்காரணம் கொண்டு சனாதன சக்திகளிடம் இத்தொகுதியை பறிகொடுத்து விடக்கூடாது. திமுக கூட்டணிப் பேச்சுவார்த்தையில் 6 தொகுதிகள் ஒதுக்கிய போதும், அதை ஏன் ஏற்றுக் கொண்டேன் என்பதை நீங்கள் புரிந்து கொள்ளவேண்டும். நான் ஏற்காமல் ஆத்திரப்பட்டு வெளியே வந்திருந்தால், நமக்கு எந்த லாபமும் கிட்டப்போவதில்லை. அதேநேரத்தில் திமுக கூட்டணி சிதறி, அது அதிமுகவுக்கு சாதகமாக மாறிவிடும்.தமிழகத்தில் பாஜகவுக்கு வழி விட்டது போலாகிவிடும்.
தமிழகத்தில் பாஜவுக்கு இடமில்லை என்ற நிலை ஏற்படவேண்டும். தமிழகத்தில் அவர்கள் போட்டியிடும் அனைத்து தொகுதிகளிலும் டெபாசிட் இழக்கவேண்டும்.
பாஜக ஆபத்தான பயங்கர வாதக் கொள்கைக் கொண்ட கட்சி. ஆணவக் கொலைகளை தடுக்க முன்வராத கட்சி, சமூக நீதிக்கு எதிரான கட்சி. அவர்கள் மக்கள் பிரச்சினைகளுக்காக இதுவரை குரல் கொடுத்ததில்லை. மாறாக மதத்தை மட்டுமே வைத்து அரசியல் செய்யக்கூடியவர்கள்.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை ஆர்எஸ்எஸ் போன்ற அமைப்புகள் ஏற்க முன்வருவதில்லை. அம்பேத்கரின் அரசியலமைப்புச் சட்டத்தை ஏற்க முன்வராத அமைப்பின் வழிவந்த பாஜக, சமூக நீதியை குழி தோண்டி புதைக்கும் செயலில் ஈடுபட்டு வருகிறது. எனவே தான் பாஜகவை எதிர்க்கிறேன்.
பாஜக தமிழகத்தில் காலூன்ற முடியாததற்கு முதல் காரணம் நம்மிடையே நிலவும் தமிழ் மொழி உணர்வு தான். அது மேலோங்கி இருக்கும் வரை பாஜகவால் தமிழகத்தில் வெற்றி பெற முடியாது.
தற்போது கூட தமிழகத்தின் பெயரை `தட்சணபிரதேசம்’ என மாற்ற முயற்சி செய்துவருகின்றனர். `தட்சண’ என்றால் இந்தியில் தெற்கு என அர்த்தம். எனவே தெற்கு பிரதேசம், என மாற்ற முயற்சிக்கின்றனர். அதற்கு இடம் தரக்கூடாது. மொழியோடு பெயர் கொண்ட மாநிலம் நம் தமிழ்நாடு மட்டும் தான். அண்ணா இந்த பெயரை தேர்ந்தெடுத்தார் என்பதற்காகவே கள்ளக்குறிச்சி அருகே மாதவச்சேரியில் அவரது சிலையை சில மர்மநபர்கள் சேதப்படுத்தியுள்ளனர்.
மோடிக்கு தமிழ் தெரியாது. நமக்கு இந்தி தெரியாது. அதுதான் நமக்கு நல்லது. பாஜகவை முழுதாக நிராகரிக்கவேண்டும். நம்மிடம் இருந்த சிலர் பாஜகவில் இணைந்துள்ளனர். அவர்களால் அங்கும் பரிணமிக்க முடியாது என்றார்.