

மழை நீர் தேங்கியதால் மூடப்பட்டிருந்த அம்பத்தூர் பால் பண்ணை நேற்று பிற்பகல் முதல் செயல்படத் தொடங்கியது.
சென்னையில் தினமும் 11 லட்சத்து 50 ஆயிரம் லிட்டர் ஆவின் பால் விற்பனை செய்யப்படுகிறது. மாதவரம், சோழிங்கநல்லூர், அம்பத்தூர் ஆகிய பால் பண்ணைகளில் பதப்படுத்தப்பட்டு பால் பாக்கெட்டுகள் விநியோகம் செய்யப்படுகின்றன.
மழைநீர் சூழ்ந்தது
சென்னையில் கடந்த 15-ம் தேதி பெய்த கன மழையால் அம்பத்தூர் தொழிற்பேட்டையில் மழைநீர் சூழ்ந்தது. இதனால் அங்கு உள்ள பல்வேறு தொழிற்சாலைகளுக்கு விடுமுறை விடப்பட்டது. அம்பத்தூர் பால் பண்ணையிலும் மழைநீர் புகுந்ததால் அந்நிறுவனமும் கடந்த 16-ம் தேதி மூடப்பட்டது.
இதனால் 3 லட்சத்து 25 ஆயிரம் லிட்டர் பால் பற்றாக்குறை ஏற்பட்டது. இதை சமாளிக்க, மாதவரம், சோழிங்கநல்லூர் ஆகிய பால் பண்ணைகளில் கூடுதலாக தலா 1 லட்சம் லிட்டர் பால் பாக்கெட்டுகள் உற்பத்தி செய்யப்பட்டன. மீதம் உள்ள 1 லட்சத்து 25 ஆயிரம் லிட்டர் பால், விழுப்புரம், வேலூர், சேலம் ஆகிய பால் பண்ணைகளில் இருந்து பெறப்பட்டு ஈடுசெய்யப்பட்டது.
ஆவின் அதிகாரி தகவல்
இந்நிலையில் நேற்று அம்பத்தூர் பால் பண்ணை செயல்படத் தொடங்கியது.
இது தொடர்பாக ஆவின் அதிகாரி ஒருவர் கூறும்போது, “நிறுவனத்துக்குள் புகுந்த மழைநீர் வெளியேற்றப்பட்டுவிட்டது. உபகரணங்கள் அனைத்தும் சுத்தப்படுத்தப்பட்டு, நேற்று பிற்பகலில் இருந்து பால் பண்ணை செயல்படத் தொடங்கியுள்ளது” என்றார்.