

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் நாகர்கோவில் பகுதிகளில் நேற்று தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார்.
பார்வதிபுரத்தில் தொடங்கிய வாகனப் பிரச்சாரத்தில் விஜய்வசந்த் பேசியதாவது,: தமிழகத்தில்புதிய எழுச்சியை ஏற்படுத்துவதற்கு வரும் தேர்தல் முக்கியமானது. குமரி மாவட்டத்தில் மக்கள்விரோத திட்டங்களை
அனுமதிக்க மாட்டேன். இந்தியாவிலேயே குமரிமாவட்டத்தை முதன்மை மாவட்டமாக்க முயற்சிப்பேன்.இளைஞர்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்த தொழில்நுட்ப பூங்கா அமைக்க நடவடிக்கை எடுப்பேன். மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் சரக்குப் பெட்டக மாற்று முனையத்தை ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம். தோவாளையில் நறுமணத் தொழிற்சாலை அமைக்கப்படும். கலை, இலக்கியம் மற்றும் விளையாட்டுத்துறைகளில் இளைஞர்கள் உலகத்தரத்துக்கு முன்னேறும் வகையில் தக்க உதவிகள்கிடைக்கப் பாடுபடுவேன். இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து பள்ளிவிளை, அருந்ததியர் தெரு, வாத்தியார்விளை, கிருஷ்ணன்கோவில், அருகுவிளை, வஞ்சி ஆதித்தன் புதுத்தெரு, ஒழுகினசேரி, வடிவீஸ்வரம், கம்பளம் பகுதிகளில் விஜய் வசந்த் பிரச்சாரம் செய்தார். பிரச்சாரத்தில் நாகர்கோவில் சட்டப்பேரவை தொகுதி திமுக வேட்பாளர் சுரேஷ்ராஜன், காங்கிரஸ் மாவட்டத்தலைவர் ராதாகிருஷ்ணன், மதிமுக மாவட்டச் செயலாளர் வெற்றிவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.