

அதிமுக கூட்டணி அரசியல் ரீதியாக பலவீனமடைந்துவிட்டதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட கோட்டூர், கம்பன்குடி ஆர்ச் உள்ளிட்ட பகுதிகளில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் க.மாரிமுத்துவை ஆதரித்து அக்கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் நேற்று வாக்கு சேகரித்தார். பின்னர், களப்பாலில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் அவர் பேசியது:
அரசியல் பலம், அணி பலத்துடனும் திமுக கூட்டணி உள்ளது. அதிமுக கூட்டணி அரசியல் ரீதியாக பலவீனமடைந்துவிட்டது. அதிமுக அணியின் சக்கரங்கள் கழன்று விழுந்துவிட்டதால், எப்போது குடைசாயும் எனத் தெரியவில்லை.
மத்திய அரசு ஜனநாயக பாதையை கைவிட்டு சர்வாதிகார பாதையில் செல்கிறது. நாட்டு மக்களுக்கு எதிரான சட்டங்களை நிறைவேற்றி வருகிறது. இதற்கெல்லாம் இந்தத் தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும். நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் நாட்டையும், அரசியலமைப்பு சட்டத்தையும் காப்பாற்ற திமுக கூட்டணி வெற்றி பெற வேண்டும்.
அதிமுக, பாஜக கூட்டணி ஒரு துரோக கூட்டணி. தமிழக நலன்களை பற்றி சிந்திக்காத கூட்டணி. ஆனால், திமுக கூட்டணி கட்சிகள் தேர்தலுக்காக வரும் கட்சிகள் அல்ல. மக்களின் இன்ப துன்பங்களில் நேரடியாக பங்குபெறும் கட்சிகள். எனவே, திமுக கூட்டணி கட்சிகளுக்கு பொதுமக்கள் வாக்களித்து வெற்றியடையச் செய்ய வேண்டும் என்றார்.