

பொதுமக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய வகையில் அதிக சத்தத்துடன் நடத்தப்படும் தேர்தல் பிரச்சாரத்தை தடை செய்ய தமிழக தேர்தல் ஆணையத்துக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி பிரச்சாரம் செய்து வரும் அரசியல் கட்சியினர் மிக அதிக சப்தம் எழுப்பும் ஒலிபெருக்கியுடன் பிரச்சாரம் செய்து வருகின்றனர். இதனால், மருத்துவமனை வளாகங்களில் உள்ள நோயாளிகள், பள்ளி, கல்லூரி வளாகங்களில் உள்ள மாணவர்கள் மற்றும் குடியிருப்பு களில் உள்ள குழந்தைகள், முதியவர்கள் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றனர்.
இந்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் 55 டெசிபல் அளவைப் பகலிலும், 45 டெசிபல் அளவு ஒலியை இரவிலும் கேட்கலாம் என பரிந்துரைத்துள்ளது. ஆனால், தற்போது நடைபெறும் தேர்தல் பிரச்சாரங்களில், மிகப்பெரும்பான்மையானவை, 120 டெசிபலுக்கும் அதிகமாக ஒலி எழுப்பும் வகையில் உள்ளதால், தமிழக தேர்தல் ஆணையம் உடன டியாக நடவடிக்கை எடுத்து, அதிக ஒலி எழுப்பும், பொதுமக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் தேர்தல் பிரச்சாரங்களைத் தடை செய்து ஒலிபெருக்கி கருவிகளை பறிமுதல் செய்ய வேண்டும் என தமிழ்நாடு நுகர்வோர் குழுக்களின் மாநில ஒருங்கிணைப்பாளர் க.திருநாவுக்கரசு தமிழக தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பியுள்ள மனுவில் தெரிவித்துள்ளார்.