

தேர்தல் தேதி அறிவிப்புக்கு பின் தென்காசி மாவட்டத்தில் முதல்வர், துணை முதல்வர் பிரச்சாரம் செய்யாததால் அதிமுகவினர் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
தென்காசி மாவட்டத்தில் உள்ள சங்கரன்கோவில், வாசுதேவ நல்லூர், கடையநல்லூர், தென்காசி, ஆலங்குளம் ஆகிய 5 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் அதிமுக போட்டியிடுகிறது. தற்போதைய எம்எல்ஏக்கள் செல்வமோகன்தாஸ் பாண்டியன், மனோகரன், அமைச்சர் வி.எம்.ராஜலெட்சுமி ஆகிய 3 பேருக்கும் மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. கடையநல்லூர் தொகுதியில் தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக செயலாளர் கிருஷ்ணமுரளி, ஆலங்குளம் தொகுதியில் பால் மனோஜ் பாண்டியன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
திமுக கூட்டணி வேட் பாளர்களை ஆதரித்து தென்காசி மாவட்டத்தில் அக்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், மகளிரணி செயலாளர் கனிமொழி, இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் பிரச்சாரம் செய்துள்ளனர். மேலும், தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பே
‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற நிகழ்ச்சி நடத்தி, மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார். முன்னணி தலைவர்கள் பிரச்சாரத்தால் திமுக கூட்டணியினர் உற்சாகமாக உள்ளனர்.
ஆனால், அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட முன்னணி தலைவர்கள் இதுவரை பிரச்சாரம் செய்யவில்லை. தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பு முதல்வர் பழனிசாமி பிரச்சாரம் செய்தார். ஆனால், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட பின்னர் அவர் பிரச்சாரத்துக்கு வரவில்லை. திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் பிரச்சாரம் செய்த முதல்வர் தென்காசி மாவட்டத்துக்கு இதுவரை வரவில்லை. மேலும், கூட்டணி கட்சிகளான பாஜக, பாமக சார்பிலும் முன்னணி தலைவர்கள் தென்காசி மாவட்டத்துக்கு பிரச்சாரத்துக்கு வரவில்லை.
தேர்தல் பிரச்சாரம் நாளை மாலையுடன் ஓய்கிறது. ஆனால், தென்காசி மாவட்டத்துக்கு முதல்வர், துணை முதல்வர் பிரச்சாரம் தொடர்பாக இதுவரை எந்த அதிகாரபூர்வ தகவலும் வரவில்லை என்று, அதிமுகவினர் கூறுகின்றனர். பிரச்சாரத்துக்கு முன்னணி தலைவர்கள் வராததால் அதிமுகவினர் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.