

திருநெல்வேலி மாவட்டத்தில் சட்டப் பேரவை தேர்தல் வாக்குப்பதிவுக்கு இன்னும் 3 நாட்களே இருக்கும் நிலையில், முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் இறுதி கட்ட வாக்கு சேகரிப்பில் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் மொத்தமுள்ள 5 சட்டப் பேரவை தொகுதிகளில் திருநெல்வேலியில் 14 பேரும், பாளையங்கோட்டையில் 10 பேரும், அம்பாசமுத்திரத்தில் 12 பேரும், நாங்குநேரியில் 15 பேரும் வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர். அதிகபட்சமாக ராதாபுரம் தொகுதியில் 25 பேர் களத்தில் உள்ளனர். திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் தேர்தல் களத்தில் 76 வேட்பாளர்கள் உள்ளனர். இவர்களில் முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் கடந்த 2 வாரமாகவே தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
துண்டு பிரசுரங்கள்
தங்கள் கட்சி தலைமை வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்டுள்ள முக்கிய வாக்குறுதிகளையும், தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தாங்கள் செயல்படுத்தும் திட்டங்கள் குறித்த வாக்குறுதிகளையும் அச்சிட்டு துண்டு பிரசுரங்களாக வீடுகள்தோறும் அளிக்கும் பணிகளிலும் முக்கிய கட்சியினர் ஈடுபட்டுள்ளனர். அத்துடன் ஆட்டோ, வேன்களில் ஒலிபெருக்கி பிரச்சாரமும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதிமுக, திமுக கட்சி தலைவர்கள், சின்னங்கள் அச்சிட்ட பதாகைகள் கட்டிய 3 சக்கர வாகனங்களும் சாலைகளில் சுற்றிக்கொண்டிருக்கின்றன.
முக்கிய கட்சிகளின் வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்ட மாநில, தேசிய தலைவர்களும் திருநெல்வேலி மாவட்டத்துக்கு வந்து சென்றுள்ளனர். இன்றும் வரவுள்ளனர். அதிமுகவுக்கு ஆதரவு கேட்டு முதல்வர் பழனிசாமி 5 தொகுதிகளிலும் பிரச்சாரம் செய்துள்ளார். துணை முதல்வர் உள்ளிட்ட முக்கிய அமைச்சர்கள் தொகுதிகளுக்கு வரவில்லை. அவரவர் தொகுதிகளில் கவனம் செலுத்துவதால் அமைச்சர்கள் பிரச்சாரத்துக்கு வரவில்லை என்று அதிமுக வட்டாரங்கள் தெரிவித்தன.
பாஜகவுக்கு ஆதரவு திரட்ட திருநெல்வேலி தொகுதிக்கு மத்திய இணையமைச்சர்கள், கட்சியின் மாநில தலைவர் முருகன், நட்சத்திர பேச்சாளர்களான குஷ்பு, நமீதா வந்து சென்றுள்ளனர். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று இத் தொகுதியில் பிரச்சார கூட்டத்தில் பேசவுள்ளார்.
திமுக வேட்பாளர்களுக்கு ஆதரவு கேட்டு அக் கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின், கனிமொழி எம்.பி. ஆகியோர் பிரச்சாரம் செய்துள்ளனர்.
காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு திரட்டும் வகையில் நாங்குநேரியில் நடைபெற்ற கூட்டத்தில் ராகுல்காந்தி மற்றும் தலைவர்கள் பங்கேற்றனர்.
இறுதிகட்ட பிரச்சாரம்
அமமுக வேட்பாளர்களுக்கு ஆதரவு கேட்டு அக் கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அனைத்து தொகுதிகளிலும் பிரச்சாரம் மேற்கொண்டார். எஸ்டிபிஐ கட்சிக்கு ஆதரவு கேட்டு அக் கட்சியின் தேசிய நிர்வாகி தெஹ்லான் பாகவி, அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் சுப உதயகுமார் ஆகியோர் பிரச்சாரம் செய்துள்ளனர்.
தேர்தல் பிரச்சாரம் நாளையுடன் நிறைவு பெறும் நிலையில் இறுதிகட்ட வாக்கு சேகரிப்பில் முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தங்களது ஆதரவு வீடியோக்கள், எதிரணியினருக்கு எதிரான மீம்ஸ், கருத்துகள், படங்கள் உள்ளிட்டவற்றை சமூக வலைதளங்களில் வெளியிடுவதற்காக, தனியாக ஒரு குழுவை முக்கிய வேட்பாளர்கள் உருவாக்கி வைத்துள்ளனர்.