

திருவண்ணாமலை சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் எ.வ.வேலு, தனது தேர்தல் வியூகத்தை மாற்றி அமைத்து அதிமுக மீதான விமர்சனத்தை தவிர்த்து வருகிறார்.
திமுக ஆட்சியில்(2006-11) உணவுத் துறை அமைச்சராக இருந்தவர் எ.வ.வேலு. இவர் 1984-ல் நடைபெற்ற தேர்தலில், தண்டராம்பட்டு தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
எம்ஜிஆர் மறைவுக்கு பிறகு, ஜானகி அணியில் இருந்த எ.வ.வேலு, அதிமுகவில் உரிய முக்கியத்துவம் கிடைக்கவில்லை என்பதால், திமுகவில் இணைந்தார். இதையடுத்து அவர், திமுக சார்பில் 2001 மற்றும் 2006-ல் நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்டு வென்றார்.
தொகுதி சீரமைப்புக்குப் பிறகு, திருவண்ணாமலை சட்டப்பேரவைத் தொகுதியில் 2011, 2016-ல் என இரண்டு முறை வெற்றி பெற்றுள்ளார். தற்போது 3-வது முறையாக, திருவண்ணாமலை தொகுதியில் களம் காண்கிறார். இவர், தன்னை எதிர்த்து பாஜக போட்டியிடுவதால், அக்கட்சியை கடுமையாக விமர்சித்து வருகிறார்.
தேர்தல் பிரச்சாரத்தில் பேசும் அவர், “பாஜக ஆட்சியில் அண்ணாமலையார் கோயிலை தொல்லியல் துறை கையகப்படுத்தியது, பண மதிப்பிழப்பு, சுவிஸ் வங்கியில் உள்ள கருப்பு பணத்தை மீட்டு, ஒவ்வொரு இந்தியரின் வங்கிக் கணக்கில் ரூ.15 லட்சம் முதலீடு செய்வது, நீட் தேர்வு கொண்டு வந்தது.
நாடு முழுவதும் ஓரே மொழி, ஓரே மதம் என்பது, பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் காஸ் சிலிண்டர் விலை உயர்வு, தமிழ் மொழியை புறக்கணித்து சமஸ்கிருதம் மற்றும் இந்தி மொழியை திணிப்பது, விவசாயத்தை அழிக்கும் 3 வேளாண்மை சட்டங்களை இயற்றியது, சிறுபான்மையின மக்களுக்கு எதிரான குடியுரிமை திருத்த சட்ட மசோதாவை கொண்டு வந்தது, தமிழகத்தில் வட மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கி கொடுப்பது“ ஆகியவற்றை மக்கள் மன்றத்தில் எடுத்துரைத்து வருகிறார்.
மேலும் அவர், திமுகவின் தேர்தல் அறிக்கையில் உள்ள அறிவிப்புகளை வெளிப்படுத்த மறப்பதில்லை.
பாஜகவை கடுமையான விமர்சிக்கும் எ.வ.வேலு, அதிமுக மீதான விமர்சனத்தைத் தவிர்த்து வருகிறார். தேர்தல் பிரச்சாரத்துக்கு செல்லும் இடங்களில் பேசும் அவர், “10 ஆண்டு ஆட்சியில் அதை செய்தோம், இதை செய்தோம் என சொல்லி அதிமுகவினர் வாக்கு கேட்பார்கள். ஆனால், பாஜகவினர் எதைச் சொல்லி வாக்கு கேட்பாளர்கள்” என கேள்வி எழுப்புகிறார்.
அதிமுக ஆட்சியில் நடைபெற்றுள்ள முறைகேடு மற்றும் ஊழல் குறித்து அழுத்தமாக பேசுவதில்லை. தேர்தல் பிரச்சாரத்தில் பேசும் அவர், “அதிமுகவினரை அதிகம் விமர்சித்து நான் பேசுவதில்லை.
அதற்கு காரணம் அவர்கள் காப்பாற்றப்பட வேண்டிய நிலையில் உள்ளனர். அதிமுக முகமூடியை அணிந்து பாஜக வலம் வருகிறது. அதிமுகவினர் அண்ணாவின் பெயரை சொல்பவர்கள், மாநில உரிமைகளுக்கு குரல் கொடுப்பவர்கள், அவர்களது இயக்கத்தின் பெயரிலும் திராவிடம் உள்ளது. எனவே, பாஜகவிடம் இருந்து அதிமுக காப்பாற்றப்பட வேண்டும்” என்கிறார். அவரது பேச்சு என்பது அதிமுகவினரின் ஆதரவை மையமாகக் கொண்டு அமைகிறது. தொலைநோக்கு சிந்தனையுடன் பிரச்சார வியூகத்தை அமைத்து எ.வ.வேலு செயல்படுவதாக, உடன்பிறப்புகள் பெருமிதத்துடன் கூறி வருகின்றனர்.
தாமரை இலை மீது நீர்த்துளி...
அவர்கள் கூறும்போது, “தாமரை இலை மீது நீர்த்துளி படிந்தது போல் பாஜக மற்றும் அதிமுக உள்ளது. பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளது, மேலிடத்தின் விருப்பம் என்றாலும், தொண்டர்கள் மத்தியில் நீறு பூத்த நெருப்பாகவே இருக்கிறது. இதன் தாக்கம் வாக்குப்பதிவிலும் எதிரொலிக்கலாம். அதனால்தான், அதிமுக மீதான விமர்சனத்தை தவிர்த்து, அவர்களுக்கு ஆதரவான கருத்துகளை பதிவு செய்கிறார். பாஜகவிடம் இருந்து அதிமுகவை மீட்க வேண்டும் என்ற எ.வ.வேலுவின் கருத்து, அதிமுகவினரை சிந்திக்க வைத்துள்ளது. பாஜக வெற்றி பெற்றால், அதிமுக என்ற இயக்கமே காணாமல் போய்விடும் என, அக்கட்சியினர் பேசி வருகின்றனர். இதனை, தனக்க சாதகமாக பயன்படுத்திக் கொள்ளவே, எ.வ.வேலு காய்களை நகர்த்தி வருகிறார். அவரது தேர்தல் வியூகம் வெற்றியை தேடி தரும்” என்றனர்.