Last Updated : 02 Apr, 2021 09:53 PM

 

Published : 02 Apr 2021 09:53 PM
Last Updated : 02 Apr 2021 09:53 PM

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களை அதிமுக அரசு கைவிட்டுவிட்டது: எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் குற்றச்சாட்டு

படவிளக்கம்: கறம்பக்குடியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் எம்.சின்னதுரைக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்கிறார் முன்னாள் மத்திய அமைச்சர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் எம்.பி.

புதுக்கோட்டை

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களை அதிமுக அரசு கைவிட்டுவிட்டது என முன்னாள் மத்திய அமைச்சர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் எம்.பி தெரிவித்தார்.

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் எம்.சின்னதுரையை ஆதரித்து கறம்பக்குடியில் இன்று நடைபெற்ற பிரச்சாரத்தில் அவர் பேசியது :

இதுவரை கட்டிக்காக்கப்பட்டு வந்த இந்திய அரசியல் சாசன சட்டம் பாஜக ஆட்சியில் அவமானப்படுத்தப்பட்டு வருகிறது.

நாடெங்கிலும் ஒற்றைக் கலாச்சார முறையை கொண்டுவர மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது.

எந்த மருத்துவத்துக்கும் வெளிநாடு செல்லத் தேவையில்லாத அளவுக்கு மருத்துவ வசதிகள் தமிழகத்தில் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.ஆனால், தமிழக மாணவர்களின் மருத்துவக் கனவு நீட் தேர்வு மூலம் தகர்க்கப்படுகிறது.

இதேபோன்று, விவசாயிகள் மற்றும் விவசாயத்தை குடியுரிமை சட்டம் மூலமும், சிறுபான்மை மக்களின் வாழ்க்கையை குடியுரிமை சட்டம் மூலம் பாஜக அரசு தகர்க்கிறது.

மத்திய அரசின் இத்தகைய செயல்களை தடுக்க வேண்டுமேயானால் தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைந்தால்தான் சாத்தியம்.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பெண்கள் நிவாரணம் பெறுவதற்கு அரசு அலுவலகங்களுக்கு பலமுறை பயணித்தார்கள். ஆனால், ஆளும் கட்சியினருக்கு மட்டுமே முறையாக நிர்வாணம் கிடைத்ததே தவிர அப்பாவி மக்களுக்கு கிடைக்கவில்லை.

அனைத்து வாழ்வாதாரங்களையும் இழந்து தவித்த மக்களுக்கு அன்றே கடன் தள்ளுபடி செய்து இருந்தால் இந்த அளவுக்கு விவசாயிகளும், சுய உதவிக்குழு பெண்களும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து இருக்க மாட்டார்கள்.

புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முறையாக வீடுகட்டி கொடுக்கவில்லை.

2 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டின்மீது கட்டப்பட்ட தார்ப்பாய்கள் இன்றுவரை பல வீடுகளில் அகற்றப்படாமல் இருப்பது புயலின் கோரதாண்டவத்தை அந்தக் குடும்பங்கள் எந்த அளவுக்கு பாதித்திருக்கும் என்பதை உணர முடியும்.

புயலால் பாதிக்கப்பட்ட மக்களை அதிமுக அரசு கைவிட்டுவிட்டது.

எனவேதான், பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடும்பத்துக்கு தலா ரூ.5,000 வீதம் நிவாரணம் வழங்க வேண்டும் என திமுக வலியுறுத்தியது. அதை அதிமுக அரசு செய்யவில்லை. திமுக ஆட்சி வந்ததும் உரிய நிவாரணம் வழங்கப்படும் என்றார்.

இதே வேட்பாளருக்கு ஆதரவாக கறம்பக்குடியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் மு.மாதவன் தலைமையில் அக்கட்சியின் மாநிலத் துணைச் செயலாளர் வீரபாண்டியன் பிரச்சாரம் செய்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x