

ஸ்ரீரங்கத்தில் அமைக்கப்பட்ட வண்ணத்துப்பூச்சி பூங்கா, நட் சத்திர வனம் மற்றும் வனத்துறை தொடர்பான 222 கட்டிடங்கள் ஆகியவற்றை முதல்வர் ஜெய லலிதா திறந்து வைத்தார். இவற் றின் மொத்த திட்ட மதிப்பு ரூ.40 கோடியே 93 லட்சத்து 21 ஆயிரம்.
இது தொடர்பாக, தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
திருச்சி, ஸ்ரீரங்கம் பகுதியில் மேல் அணைக்கட்டு காப்புக் காட்டில் ரூ.8 கோடியே 5 லட்சத்து 89 ஆயிரம் மதிப்பில் வண்ணத் துப்பூச்சி மற்றும் நட்சத்திர வனம் அமைக்கப்பட்டுள்ளது. இதை முதல்வர் ஜெயலலிதா காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
மேலும், காஞ்சிபுரம், நன்மங்கலத்தில் ரூ.7 கோடி மதிப்பில் தமிழ்நாடு பல்லுயிர் பெருக்கம் மற்றும் பசுமையாக்கல் திட்ட மேலாண் அலுவலக கட்டிடம், திருச்சியில் தலைமை வனப்பாதுகாவலர், விழுப்புரம் மற்றும் வேலூரில் வனப்பாதுகாவலர் அலுவலகங் கள் கட்டப்பட்டுள்ளன.
மேலும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் 5 மாவட்ட வன அலுவலர், 2 உதவி வனப்பாதுகாவலர், 16 வனச்சரகர், 22 வனவர், 49 ஒருங்கிணைந்த வனக்காப்பாளர், வனக்காவலர் குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன.
கண்காணிப்பு கோபுரங்கள்
இவை தவிர, 7 மாவட்ட வன அலுவலகங்கள், 13 வன விரிவாக்க அலுவலகங்கள், 5 வன பாதுகாப்புப்படை, 17 வனச்சரகர் அலுவலகங்கள், 4 வன ஓய்வு விடுதிகள், வைகை அணை வனவியல் பயிற்சி கல்லூரியில் களப்பணியாளர் விடுதி, 4 கருத்து விளக்கக் கூடங்கள் ஆகியவை கட்டி முடிக்கப்பட்டுள்ளன.
நெல்லை, ஈரோடு, கன்னியா குமரி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் 20 வேட்டை தடுப்பு முகாம்கள், பள்ளிக்கரணை சதுப்பு நிலம் உள்ளிட்ட 5 இடங்களில் பறவைகள் கண்காணிப்பு கோபுரங்கள், 8 மாவட்டங்களில் 22 தீத்தடுப்பு கண்காணிப்பு கோபுரங்கள் கட்டப்பட்டுள்ளன.
மேலும், கடலூர், நாகை, கோவையில் 5 வாகன நிறுத்துமிடங்கள், திண்டுக்கல், காஞ்சிபுரத்தில் 2 மேல் நிலை நீர்த்தேக்க தொட்டிகள், பள்ளிக்கரணை சதுப்பு நிலப்பகுதியில் 2 வனச்சோதனை சாவடிகள், குமரி மாவட்டம்- காளிகேசத்தில் சோலா காடுகள் விழிப்புணர்வு மையம், வேலூரில் 5 வனப்பொருள் சேமிப்பு மையங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.
நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் 8 குரங்குகள் மறுவாழ்வு மையங்கள், வேலூர் மற்றும் திருவண்ணாமலையில் 3 இடங்களில் மலையேற்ற பாதை கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன.
இவ்வாறாக ரூ.32 கோடியே 88 லட்சத்து 32 ஆயிரம் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்டு தயார் நிலையில் இருந்த 222 கட்டிடங்களையும் நேற்று முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார். திறக்கப்பட்ட கட்டிடங்கள் மற்றும் பூங்காவின் மொத்த மதிப்பு ரூ.40 கோடியே 93 லட்சத்து 21 ஆயிரமாகும்.
அமைச்சர்கள் பங்கேற்பு
நிகழ்ச்சியில், அமைச்சர்கள் எம்.எஸ்.எம்.ஆனந்தன், தோப்பு என்.டி.வெங்கடாசலம், தலைமை செயலர் கு.ஞானதேசிகன், வனத்துறை செயலர் ஹன்ஸ் ராஜ் வர்மா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.