எங்கள் கவனம் நாட்டின் மீதுள்ளது; எதிர்கட்சிகளின் கவனம் வாரிசுகளின் மீதுள்ளது; கன்னியாகுமரி பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு

எங்கள் கவனம் நாட்டின் மீதுள்ளது; எதிர்கட்சிகளின் கவனம் வாரிசுகளின் மீதுள்ளது; கன்னியாகுமரி பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு
Updated on
2 min read

பாரதிய ஜனதா அரசின் கவனம் எல்லாம் நாட்டின் மீதே உள்ளது. ஆனால் எதிர்க்கட்சிகளின் கவனமோ தங்களது வாரிசுகள் மீது உள்ளது என கன்னியாகுமரி பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.

கன்னியாகுமரி அருகே அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி வளாகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து இன்று மாலை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று பிரச்சாரம் மேற்கொண்டார்.

இதில் கன்னியாகுமரி மக்களவை இடைத்தேர்தலில் போட்டியிடும் பொன் ராதாகிருஷ்ணன், சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்கள் எம்.ஆர்.காந்தி, குமரி ரமேஷ், ஜெயசீலன், நயினார் நாகேந்திரன், அதிமுக வேட்பாளர்கள் தளவாய் சுந்தரம், ஜாண்தங்கம், தமாகா வேட்பாளர் ஜூட் தேவ் ஆகாியோரை ஆதரித்து பிரதமர் மோடி பேசியதாவது:

அய்யா வைகுண்டர், கவிமணி தேசியவிநாயகம் பிள்ளை, தாணுலிங்க நாடார், காமராஜர், மார்ஷல் நேசமணி போன்றவர்களை போற்றிய பெருமைபெற்ற இந்த மண்ணில் உங்கள் முன் உரையாற்றுவதில் பெருமை கொள்கிறேன்.

கன்னியாகுமரி பகவதியம்மன் கோயில், நாகராஜா கோயில், சுவாமி விவேகானந்தர் நினைவிடம் போன்றவை இங்கு சிறப்பை பறைசாற்றுகிறது.

புனித வெள்ளியான இன்று இயேசுவின் தியாகத்தை நினைவுகூர கடமைப்பட்டுள்ளேன். உங்களின் ஆசிகளை நாடி இங்கு வரும்போது வலுவான சாதனைகளையும் எடுத்து வந்துள்ளேன்.

1965ம் ஆண்டு ராமேஸ்வரம் பாலம் சேதமடைந்த பின்னர் யாரும் அவற்றை சீரமைக்கவில்லை. இதைப்போல் பாம்பன் பாலமும் இருந்தது.

இவற்றை பாஜக அரசு வந்த பின்னரே சீரமைத்தோம். தமிழகத்தில் சாலைகள் சீரமைப்பிற்காக ரூ.1 லட்சம் கோடிகளை ஒதுக்கியுள்ளோம்.

நமது கவனம் எல்லாம் நாட்டின் மீது தான் இருக்கிறது. ஆனால் எதிர்க்கட்சிகளின் கவனம் தனது வாரிசுகள் மீதே உள்ளது. எங்களது சித்தாந்தம் அனைவரையும் முன்னேற்றமடைய செய்யவேண்டும். மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்பதே அரசின் நோக்கம். ஈராக்கில் கடத்தப்பட்ட செவிலியர், மற்றும் ஆப்கானிஸ்தானில் கடத்தப்பட்ட பாதிரியார் அலெக்ஸ் பிரேம்குமார் மீட்கப்பட்டுள்ளனர்.

மோதலில் நம்பிக்கை கொண்டவர்களாக எதிர்க்கட்சியினர் உள்ளனர். நாங்கள் அன்பு, இரக்கத்துடன் பணியாற்றிக் கொண்டிருக்கிறோம். அது தொடர்ந்து செயல்பட்டு கொண்டேதான் இருக்கும்.

வெளிநாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்ட இந்தியர்களை பாதுகாப்புடன் சொந்த நாடுகளுக்கு வர நடவடிக்கை எடுத்தோம். தமிழகத்தில் மட்டும் 5 லட்சம் பேர் மீட்கப்பட்டுள்ளனர். அவர்கள் என்ன சாதி, எந்த புனித நூலை பாடிக்கிறார்கள் என்பதை நாங்கள் பார்க்கவில்லை.

அவர்கள் அனைவருமே இந்தியர்கள் என்பது தான் முக்கியம். வளமான விவசாயம், மீன்வளம் போன்றவற்றை மேம்படுத்தி வருகிறோம்.

தற்போதைய ஆட்சியில் கொப்பரை தேங்காய்க்கு நல்ல விலை கொடுக்கப்படுகிறது. வணிகங்களை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்கிறோம். சிறு குறு தொழில்கள், கைவினைப் பொருட்கள் உற்பத்தி மேம்படுத்தப்பட்டு வருகிறது.

கடற்கரை, துறைமுகம் சார்ந்த வளர்ச்சியை மேற்கொண்டு வருகிறோம். இருக்கும் துறைமுகங்களை விரிவுபடுத்தப்படுகிறது. மேலும் புதிய துறைமுகங்கள் அமைக்கப்படும்.

மீனவர்கள் வாழ்வாதாரம் உயரும் வகையில் ரூ.20 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. பிற நாடுகளில் தவிக்கும் மீனவர்கள், படகுகள் அனைத்தும் மீட்கப்பட்டு வருகின்றன.

மீன்களைப் பிடி்த்துகொண்டு வந்தாலும் வர்த்தகம் செய்வதில் சில நடைமுறை தடைகள் உள்ளன. இவற்றை சரிசெய்ய சாலை, நீர்வழிகள் மேம்படுத்தப்படும்.

இந்தக் கூட்டத்தில் திரண்டிருக்கும் உங்களிடம் கேட்கிறேன், வருகிற 6ம் தேதி கன்னியாகுமரி மக்களவை தொகுதயில் போட்டியிடம் பொன் ராதாகிருஷ்ணனுக்கு வாக்களித்து, அவர் மீண்டும் மக்கள் சேவையாற்ற வாய்ப்பளியுங்கள் என்றார்.

கூட்டத்தில் மத்திய இணை அமைச்சர் கிஷான் ரெட்டி, மற்றும் பல்லாயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in