

வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணியில் திமுகவினர் முழுமையாக தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என அக்கட்சியின் தலைவர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளின்போது நடந்த குளறுபடிகள் குறித்து திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகள், ‘‘வரும் 24-ம் தேதிக்குள் திமுக கோரியபடி வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் செய்தல், இடமாற்றம் ஆகியவற்றுக்காக விண்ணப்பித்துள்ள வாக்காளர்களின் விவரங்களை கதவு எண்ணுடன் கூடிய முகவரிகளை அந்தந்த பாக முகவர்களுக்கு (பி.எல்.ஏ. – 2) வழங்க வேண்டும்’’ என கூறியுள்ளனர்.
பல இடங்களில் போலியான வாக்காளர்களை சேர்த்துள்ளதாக புகார்கள் வந்துள்ளன. எனவே, திமுகவினரும், பாக முகவர்களும் சம்பந்தப்பட்ட வாக்குச் சாவடி அதிகாரியிடம் பட்டியலைப் பெற்று அதனை சரிபார்க்கும் பணியில் ஈடுபட வேண்டும். இது குறித்த விவரங்களை வரும் 30-ம் தேதிக்குள் திமுக தலைமை அலுவலகத்துக்கு தெரிவிக்க வேண்டும்'' என்று கருணாநிதி தெரிவித்துள்ளார்.