

விருதுநகர் அருகே ஆமத்தூரில் இளஞ்சிவப்பு நிறத்தில் (பிங்க்) மகளிருக்கான மாதிரி தனி வாக்குச்சாவடி மையம் திறக்கப்பட்டது.
சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுபெறவுள்ளதை ஒட்டி 100 சதவிகித வாக்களிப்பை வலியுறுத்தி விருதுநகர் மாவட்டத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
அதன்படி, விருதுநகர் அருகே உள்ள ஆமத்தூரில் பெண்கள் மட்டுமே பங்கேற்கும் இளஞ்சிவப்பு நிற (பிங்க்) மாதிரி வாக்குச்சாவடி மையம் அமைக்கப்பட்டு தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மகளிரைக் கவரும் வகையில், இளஞ்சிவப்பு நிற வண்ணங்களால் அலங்கரிக்கப்பட்டு, பிரத்யேக வசதிகளுடன் உதவி மையம், முதியோர் ஓய்விடம், குழந்தைகள் விளையாடும் இடம், சாய்தளம், வாக்குச்சாவடி நிலைய அலுவலர் அனைவரும் இளஞ்சிவப்பு நிற வண்ண உடைகளை அணிந்து பங்கேற்றனர்.
மேலும், வாக்காளர்கள் வாக்களிக்க தேவையான பணிகளை செய்யும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு வாக்காளர்கள் வாக்குச் செலுத்தும் நடைமுறை, வாக்காளர்களை கொண்டு செயல்முறை விளக்கமும் அளிக்கப்பட்டது.
இம்மாதிரி இளஞ்சிவப்பு வாக்குச்சாவடி மையத்தை மாவட்ட ஆட்சியரும் மாவட்ட தேர்தல் அலுவலருமான இரா.கண்ணன் திறந்துவைத்தார்.
நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் பெண்கள் அனைவரும் இந்த இளஞ்சிவப்பு நிற அனைத்து மகளிர் வாக்குச்சாவடி மையத்தில் தவறாமல் வாக்களித்து ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சியரும் மாவட்ட தேர்தல் அலுவலருமான இரா.கண்ணன் அறிவுறுத்தினார்.