Published : 02 Apr 2021 05:01 PM
Last Updated : 02 Apr 2021 05:01 PM

பணத்தையும், இலவசத்தையும் மட்டுமே எதிர்பார்த்தால் கடவுளே வந்தாலும் மக்களைக் காப்பாற்ற முடியாது: விஜய பிரபாகரன்

தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட விஜய பிரபாகரன்.

புதுக்கோட்டை

பணத்தையும், இலவசப் பொருட்களையும் மட்டுமே எதிர்பார்த்தால், கடவுளே வந்தாலும் மக்களைக் காப்பாற்ற முடியாது என, தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் சுப்பிரமணியனுக்கு ஆதரவாக அக்கட்சியின் தலைவர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன், வெட்டன்விடுதி, புதுப்பட்டி, மழையூர், புதுக்கோட்டை உள்ளிட்ட இடங்களில் இன்று (ஏப். 2) பிரச்சாரம் செய்தார்.

அப்போது அவர் பேசியதாவது:

"பணத்தைக் கொடுத்து வாக்காளர்களை விலைக்கு வாங்கிவிடலாம் என்ற நம்பிக்கையில் சிலர் தேர்தல் களத்தைச் சந்தித்து வருகின்றனர். ஆனால், மக்கள் அதை ஏற்கமாட்டார்கள் என்று நம்புகிறேன். வாக்குக்குச் சொற்ப ரூபாயைக் கொடுத்துவிட்டு உங்களை வாழ்நாள் முழுக்க லாக்டவுனில் தள்ளிவிடுவார்கள்.

இதேபோன்றுதான், ஒவ்வொரு இலவசப் பொருளின் பின்னால் கோடிக்கணக்கில் ஊழல் நிறைந்துள்ளது. தமிழகத்தில் பெரும்பாலான மக்கள் மாற்றுத் துணிக்கே வழியின்றி இருக்கிறார்கள். அவர்கள் உங்களிடம் வாஷிங் மெஷின் கேட்டார்களா?. அந்த மெஷினைக் கொடுத்துவிட்டுட்டால் யார் மின் கட்டணத்தைச் செலுத்துவது?.

பணத்தையும், இலவசப் பொருட்களையும் மட்டுமே எதிர்பார்த்தால், கடவுளே வந்தாலும் மக்களைக் காப்பாற்ற முடியாது. எனவே, இவற்றுக்கு மாற்றாக மக்களுக்குச் சேவையாற்றுகிற எங்களை ஆதரியுங்கள். கட்சியின் தலைவர் விஜயகாந்த், கடந்த 40 ஆண்டுகளாக மக்களுக்காகவே உழைத்துக் கொண்டிருக்கிறார்.

செல்லும் இடங்களில் எல்லாம் நல்ல வரவேற்பு இருக்கிறது. ஆதரவாக மக்கள் பேசுகிறீர்கள். ஆனால், வாக்குச்சாவடிக்குள் சென்றவுடன் ஏனோ வாக்குப்பதிவு இயந்திரத்தில் உரிய பட்டனை அழுத்த மறந்துவிடுகிறீர்கள். மக்களுக்கு எதிராக நாங்கள் என்ன தவறு செய்தோம்? துளசி வாசம்கூட மாறும். ஆனால், இந்த தவசியின் வார்த்தை மாறாது".

இவ்வாறு விஜய பிரபாகரன் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x