Published : 02 Apr 2021 16:55 pm

Updated : 02 Apr 2021 16:56 pm

 

Published : 02 Apr 2021 04:55 PM
Last Updated : 02 Apr 2021 04:56 PM

ஐடி ரெய்டு; தலைமைத் தேர்தல் ஆணையரிடம் புகார் அளிப்பேன்: டி.ஆர்.பாலு 

it-raid-i-will-lodge-a-complaint-with-the-chief-election-commissioner-t-r-balu

சென்னை

''திமுகவினர் மீது களங்கம் சுமத்தி தேர்தல் ஆதாயம் அடைவதற்காக, மத்திய அரசின் வருமான வரித்துறை தவறாக, விதிகளை மீறி பாஜகவால் பயன்படுத்தப்படுகிறது. மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், விதி-123, பிரிவு-7ன் கீழ் ஆளுங்கட்சி வேட்பாளர்கள் பயனடையும் வகையில், அரசு இயந்திரத்தைத் தவறாகப் பயன்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது'' என்று டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மக்களவை திமுக குழுத் தலைவர் டி.ஆர்.பாலு இன்று வெளியிட்ட அறிக்கை:


“திமுக தலைவர் ஸ்டாலின் மகள் வீட்டிலும், அண்ணாநகர் தொகுதி திமுக வேட்பாளர் எம்.கே.மோகன் வீட்டிலும், கரூர் தொகுதி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி வீட்டிலும் வருமான வரித்துறையினர் தற்போது சோதனை நடத்தி வருகின்றனர்.

ஏற்கெனவே, திருவண்ணாமலை தொகுதி திமுக வேட்பாளர் எ.வ.வேலு வீட்டில் சோதனை நடத்தி, அங்கே 3.50 கோடி ரூபாய் கைப்பற்றியதாகப் பொய்யான ஒரு செய்தியைக் கசியவிட்டு, அதன் பின்னர் ‘ஒன்றுமே கைப்பற்றப்படவில்லை’ என்று கூறினார்கள்.

இப்படி திட்டமிட்டு, திமுகவினர்மீது களங்கம் சுமத்தி தேர்தல் ஆதாயம் அடைவதற்காக, மத்திய அரசின் வருமான வரித்துறை தவறாக, விதிகளை மீறி பாஜகவால் பயன்படுத்தப்படுகிறது. மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், விதி-123, பிரிவு-7ன் கீழ் ஆளுங்கட்சி வேட்பாளர்கள் பயனடையும் வகையில், அரசு இயந்திரத்தைத் தவறாகப் பயன்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது.

இந்த விதியை மீறி, மத்தியில் ஆளும் பாஜக அரசு, தமிழகத்தில் அதிமுக - பாஜக கூட்டணியின் தேர்தல் ஆதாயத்துக்காக திமுக வேட்பாளர்கள் மீதும் - திமுக தலைமை மீதும், பொய்யாக களங்கம் சுமத்த முற்படுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கதும், தண்டனைக்குரியதும் ஆகும்.

வருமான வரித் துறையினரின் இந்தச் செயல் குறித்து, தலைமைத் தேர்தல் ஆணையர் அரோராவிடம் புகார் தெரிவித்திட, தேர்தல் ஆணையத்தைத் தொடர்பு கொண்டபோது, அரோரா காணொலிக் கருத்தரங்கில் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தொடர்ந்து, தலைமைத் தேர்தல் ஆணையர் அரோரா தொடர்பு கொள்ளும்போதோ அல்லது நேரில் சந்திக்கும்போதோ, "தேர்தல் ஆணையம், அரசின் இந்த விதிமீறலை உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும், எவ்வித முகாந்திரமும் இல்லாமல் இச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்" புகார் தெரிவிக்க உள்ளேன்.

திமுக வேட்பாளர்கள் மீதும், திமுக தலைமை மீதும், வருமானவரித் துறையினரை ஏவி, திமுக மீது பொய்யாகக் களங்கத்தைச் சுமத்த மத்திய பாஜக அரசு முயலுவதை, அகில இந்தியக் கட்சிகளின் தலைவர்களான அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி.ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, ஆர்.ஜே.டி. கட்சியின் தலைவர்களில் ஒருவரான மனோஜ் ஜா, திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த டெரிக் ஓ. பிரைன் ஆகியோர் கண்டித்துள்ளனர்.

"மக்களிடம் ஆதரவில்லை, படுதோல்வி உறுதி என்ற நிலையில் வழக்கம் போல பாஜக தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துகிறது. மிரட்டலுக்கு பயந்து அடிமையாய் காலில் விழ நாங்கள் அதிமுக அல்ல. அச்சமில்லை! துணிந்து எதிர்ப்போம்! உங்கள் தப்புக்கணக்குக்கான தெளிவான பதிலை மக்களே ஏப்.6-இல் வழங்குவர்." என திமுக தலைவர் வெளியிட்ட அறிக்கை போல, இது பெரியார் உருவாக்கிய திராவிட தேசம், அண்ணா உருவாக்கிய தமிழ் தேசம், தலைவர் கருணாநிதி உருவாக்கிய சமூக நீதி தமிழ் தேசம்.

திமுக தலைவர் தலைமையில் இருக்கின்ற திமுகவின் கடைக்கோடி தொண்டன்கூட கூனிக்குறுகி, வளைந்து நெளிந்து அடிமை அதிமுகவினரைப் போல ஊர்ந்து செல்லமாட்டான். நிமிர்ந்த நன்னடை, நேர்கொண்ட பார்வை, எவருக்கும் அஞ்சாத துணிவோடு படை நடத்தும் எங்கள் தலைவர், ஜனநாயகத்தின் தகதகாயமாய் ஒளிவீசி பிரகாசித்துக் கொண்டிருக்கும், நாளை தமிழகத்தின் தலைமையேற்க இருக்கும் ஸ்டாலின் தலைமையில் வெற்றிக் கொடி நாட்டுவான்”.

இவ்வாறு டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்.


தவறவிடாதீர்!

IT RaidLodgeComplaintChief Election CommissionerT.R.Baluஐடி ரெய்டுதலைமை தேர்தல் ஆணையற்புகார்டி.ஆர்.பாலு

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x