கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் ஆற்றல், திறமைமிக்கவர் பிரதமர் மோடி: முதல்வர் பழனிசாமி பேச்சு

முதல்வர் பழனிசாமி - பிரதமர் மோடி: கோப்புப்படம்
முதல்வர் பழனிசாமி - பிரதமர் மோடி: கோப்புப்படம்
Updated on
2 min read

திமுகவை கட்சி என்று சொல்வதைவிட கார்ப்பரேட் கம்பெனி என்று கூறலாம் என, முதல்வர் பழனிசாமி விமர்சித்துள்ளார்.

அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிசாமி இன்று (ஏப். 02) மதுரை, அம்மா திடலில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணியின் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசியதாவது:

"நடைபெறுகின்ற சட்டப்பேரவை தேர்தல் ஜெயலலிதாவின் வழியிலே சிறப்பாக செயல்படுகின்ற அரசு தொடர வேண்டும் என்பதற்கான தேர்தல். நம்முடைய கூட்டணி வலிமையான கூட்டணி, வெற்றி கூட்டணி. பெரும்பான்மையான இடங்களிலே அதிமுக வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை அமைப்போம்.

மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலும், தமிழகத்திலே அதிமுக அரசும் மக்களுக்கு நன்மை செய்கின்ற அரசுகள். மத்தியிலும் மாநிலத்திலும் மக்கள் எண்ணப்படி ஆளுகின்ற அரசு இருப்பதால், அனைத்து திட்டங்களும் மக்களிடம் போய் சேர்ந்து கொண்டு இருக்கிறது. நாடு ஏற்றம் பெற, தமிழகம் வளர்ச்சி பெற மத்திய அரசு பல்வேறு வகையிலே இன்றைக்கு உதவி செய்து கொண்டிருக்கிறது.

ஓராண்டுக்கு முன்பு கரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் பரவியது, இந்தியாவிலும் பரவியது. அப்போது பிரதமர், ஓரே ஆண்டில் கரோனா வைரஸ் நோயை குணமடைய செய்வதற்கான தடுப்பூசி கண்டுபிடிக்கப்படும் என்று அறிவித்தார். அதேபோல, ஒரே ஆண்டில் உலகமே வியக்கின்ற அளவுக்கு கரோனா வைரஸ் நோயை குணப்படுத்தக்கூடிய தடுப்பூசியை இந்தியாவுக்கு வழங்கிய பெருமை பிரதமரை சாரும்.

வல்லரசு நாடுகள் கூட கரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கு தடுப்பூசி கண்டறியாத அந்த சூழ்நிலையில், இந்திய பிரதமர் தன்னுடைய அயராத உழைப்பால், நம்முடைய மருத்துவ நிபுணர்களுடைய சாதனையால், பிரதமர் கொடுத்த ஊக்கத்தால் ஒரே ஆண்டில் கரோனா வைரஸ் தொற்று நோயை குணப்படுத்தக்கூடிய தடுப்பூசியை கண்டுபிடித்து, இன்றைக்கு மக்களுக்கு தடுப்பூசி போடுகின்றனர். கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் ஆற்றல்மிக்க, திறமைமிக்க பிரதமர் என்பதை நிரூபித்திருக்கின்றார்.

நாட்டு மக்கள் அனைவரும் கட்டாயம் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை கடைபிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார். நாட்டு மக்கள் மீது அக்கறை கொண்ட தலைவர் பிரதமர். கரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கு முதன்மையாக பணியாற்றியவர் பிரதமர்.

தமிழகம் ஏற்றம் பெறுவதற்காக மத்திய அரசிடமிருந்து பல்வேறு திட்ட உதவிகள் நமக்கு கிடைக்கின்றன. நிதியுதவி கிடைக்கின்றன. நாம் கொடுக்கின்ற வாக்குறுதிகளை நிறைவேற்ற முடிகிறது என்று சொன்னால், அதற்கு நமக்கு தேவைப்படுகின்ற நிதியை மத்திய அரசு கொடுக்கிறது, திட்டத்திற்கு அனுமதி அளிக்கிறது. அதனால் தமிழகத்திலே நம்மால் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுகின்றன.

உட்கட்டமைப்பு வசதிகளை பொறுத்தவரைக்கும் தமிழகம் இந்தியாவிலேயே சிறந்து விளங்குகின்றது. மேலும், உட்கட்டமைப்பு வசதிகள் சிறக்க வேண்டும் என்பதற்காக சுமார் 1 லட்சத்து 5,000 கோடி ரூபாயை சாலை மேம்பாட்டிற்காக மத்திய அரசு ஒதுக்கி இருக்கிறது. இதனால், புதிய புதிய தொழில்கள் தமிழகத்தை நோக்கி வந்து கொண்டு இருக்கின்றன.

2019-ம் ஆண்டு சென்னையில் என் தலைமையில் உலக முதலீட்டாளர் மாநாட்டை நடத்தினோம். சுமார் 3 லட்சத்து 500 கோடி ரூபாய் தொழில் முதலீடு செய்ய தொழில் அதிபர்கள் முன்வந்தார்கள். 304 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அந்தப் பணிகள் எல்லாம் தொடங்கப்பட்டுவிட்டது. இதற்கு தமிழகத்தின் சிறப்பான உள்கட்டமைப்பு வசதியே காரணமாகும். அதனால், புதிய புதிய தொழில்கள் தமிழகத்தை நோக்கி வந்து கொண்டு இருக்கின்றன.

2006 முதல் 2011 வரை திமுக ஆட்சியில் கடுமையான மின்வெட்டு இருந்தது. அந்த கடுமையான மின்வெட்டின் காரணமாக தொழிற்சாலைகள் பாதிக்கப்பட்டன, தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டார்கள். ஜெயலலிதா 2011-ம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின் போது நான் முதல்வராகப் பொறுப்பேற்று மூன்றாண்டு காலத்தில் தமிழ்நாட்டில் தடையில்லா மின்சாரத்தை வழங்குவேன் என்று கூறினார். அதேபோல, 3 ஆண்டு காலத்தில் தடையில்லா மின்சாரத்தை வழங்கி தொழில்வளம் பெருக அடித்தளமிட்டார்.

அதே வழியில் வந்த அதிமுக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளின் காரணமாக தமிழ்நாடு இன்று மின்மிகை மாநிலமாக திகழ்ந்து கொண்டிருக்கிறது. தொழில்வளம் மிக்க மாநிலமாக தமிழ்நாடு விளங்கி கொண்டிருக்கிறது. படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கி தருகிறோம். தொழில்வளம் பெருகுகிற போது, பொருளாதாரமும் மேம்பாடு அடையும். ஆகவே, ஒரு நாட்டின் வளர்ச்சி தொழிற்சாலையை மையமாக வைத்திருக்கிறது.

அதேபோல, சட்டம் - ஒழுங்கை பேணிக் காப்பதில் இந்தியாவிலேயே முதல் மாநிலம் தமிழ்நாடு. தமிழ்நாடு அமைதிப் பூங்காவாக திகழ்கிறது.

திமுக ஆட்சியிலே எந்த திட்டத்தையும் தமிழகத்திற்கு கொண்டு வரவில்லை. திமுக ஒரு குடும்ப கட்சியாக இருக்கிறது. வாரிசு அரசியல் செய்கின்ற கட்சி திமுக கட்சி. திமுகவை கட்சி என்று சொல்வதைவிட கார்ப்பரேட் கம்பெனி என்று கூறலாம். அந்த கம்பெனியில் யார் வேண்டுமானாலும் பங்குதாரராக சேரலாம்.

அதிமுகவிருந்து நீக்கப்பட்டவர்கள் அந்த கம்பெனியில் போய் சேர்ந்து இன்றைக்கு பதவி வாங்கி தேர்தலில் நிற்கின்றார்கள். இதை மக்கள் எண்ணிப் பார்க்க வேண்டும். அதிமுக, பாஜக, நம் கூட்டணியில் இடம்பெற்று இருக்கின்ற கட்சிகள் எல்லாம் மக்களுக்கு சேவை செய்கின்ற கட்சிகள். மக்களுக்காக உழைக்கின்ற கட்சிகள். இதன்மூலமாக நாடு வளரும். தமிழகம் ஏற்றம் பெறும்".

இவ்வாறு முதல்வர் பழனிசாமி பேசினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in