

செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் வீடு உள்ளிட்ட 4 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெறுகிறது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வரும் 6-ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் கரூரில் உள்ள நிதி நிறுவனங்கள், ஜவுளி உற்பத்தி, ஏற்றுமதி நிறுவனங்களில் வருமான வரி சோதனை கடந்த வாரம் நடைபெற்றது.
கரூர் மாவட்ட திமுக பொறுப்பாளரும், அரவக்குறிச்சி எம்எல்ஏவுமான வி.செந்தில் பாலாஜி இத்தேர்தலில் கரூர் தொகுதி திமுக வேட்பாளராக போட்டியிடுகிறார்.
இந்நிலையில் கரூர் அருகேயுள்ள ராமேஸ்வரப்பட்டியில் உள்ள செந்தில் பாலாஜியின், கரூர் ராமகிருஷ்ணாபுரத்தில உள்ள செந்தில்பாலாஜியின் சகோதரர் அசோக் வீடு, ராயனூரில் உள்ள திமுக கரூர் மேற்கு நகர பொறுப்பாளர் சரவணன், கொங்கு மெஸ் மணி ஆகியோரின் வீடுகளில் கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 15க்கும் மேற்பட்ட வருமானவரித்தறையினர் இன்று (ஏப். 2ம் தேதி) காலை முதல் சோதனை நடத்தி வருகினறனர்.
வருமான வரித்துறை சோதனையையொட்டி ராமேஸ்வரபட்டியில் உள்ள செந்தில் பாலாஜி வீடு, ராமகிருஷ்ணபுரத்தில் உள்ள அவரது சகோதரர் வீடு, ராயனூரில் சரவணன் வீடு, கொங்கு மெஸ் மணி ஆகியோர் வீடுகள் முன் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.