

எய்ம்ஸ் மருத்துவமனையைக் கிடப்பில் போட்டுள்ளதை செங்கல் மூலம் உதயநிதி பிரச்சார உத்தியாக மாற்றி வருவதன் எதிரொலியாக, தனது மதுரை பிரச்சாரத்தில் இதற்காகத் தனியாக நேரம் ஒதுக்கி பிரதமர் மோடி பதிலளித்துள்ளார்.
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையை நிறுவ உள்ளதாக 2017-ல் அறிவிக்கப்பட்டு பின்னர் அடிக்கல் நாட்டும் விழா நடத்தப்பட்டது. அதன் பின்னர் ஆரம்பக்கட்டப் பணிகள் கூட கடந்த 4 ஆண்டுகளாக நடக்கவில்லை. இதை உதயநிதி ஸ்டாலின் தனது பிரச்சாரத்தில் முக்கிய அம்சமாகப் பயன்படுத்திக் கொண்டார்.
எய்ம்ஸ் என்று எழுதப்பட்ட செங்கல்லைப் பிரச்சாரத்துக்குப் போகுமிடமெல்லாம் மக்களிடம் எடுத்துக்காட்டி, மதுரையில் ரூ.78 கோடி மதிப்பில் மத்திய அரசால் கட்டப்பட்டுள்ள எய்ம்ஸ் மருத்துவமனை இதுதான். நான் கையோடு எடுத்து வந்துவிட்டேன் என்று சொன்னார். இது பெரிய அளவில் பேசுபொருளானது.
இந்த விவகாரம் தற்போது மதுரை பிரச்சாரக் கூட்டத்திலும் எதிரொலித்தது. பிரதமர் மோடி தனது பேச்சில் திமுகவை விமர்சித்தார். பின்னர் மதுரை எய்ம்ஸ் விரைவில் முறையாகக் கட்டப்படும் என்று பேசினார்.
மதுரையில் இன்று தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பிரச்சாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:
“காங்கிரஸும் திமுகவும் ஒரு விஷயத்தில் தேர்ச்சி பெற்றுள்ளன. வேலை செய்யாமல் இருப்பது, அடுத்தவர்கள் வேலை செய்தால் அதுகுறித்து இட்டுகட்டிப் பேசுவது என்பதில் முனைப்பாக உள்ளன. அதற்கு உதாரணம் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை. பல ஆண்டுகள் மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி செய்த திமுக, காங்கிரஸார் ஒரு எய்ம்ஸ் மருத்துவமனையைக்கூட கொண்டுவர முயலவில்லை.
மதுரைக்கு எய்ம்ஸ் கொண்டுவர நினைத்த அரசாங்கம் எங்கள் அரசாங்கம்தான். சர்வதேச தரத்துடன் எய்ம்ஸ் மருத்துவமனை நிறுவப்பட உள்ளது. உங்களுக்கு ஒரு விஷயத்தை உறுதியாகச் சொல்லிக் கொள்கிறேன். எய்ம்ஸ் மருத்துவமனை திட்டம் வெகு விரைவாக முறையாக நிறைவேற்றப்படும். அதற்காக அனைத்து வேலைகளும் செய்யப்படும்.
நமது அரசு, மருத்துவத்திற்கான கட்டமைப்பை நிறைய கொண்டுவந்துள்ளது. 3 மாவட்டங்களுக்கு ஒரு மருத்துவக்கல்லூரி என்பதை அரசு செயல்படுத்தி வருகிறது. மருத்துவக்கல்லூரி, பொறியியல் கல்லூரி தமிழிலேயே படிக்க ஏற்பாடு செய்யப்படும்”.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.