

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மகள் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தப்படுவது குறித்து தேர்தல் ஆணையத்திடம் அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி புகார் அளித்துள்ளார்.
இந்நிலையில், தலைமைத் தேர்தல் ஆணையர், தேர்தல் ஆணையர்கள் சுஷில் சந்திரா, ராஜீவ் குமார், தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு ஆகியோருக்கு ஆர்.எஸ். பாரதி இன்று அனுப்பியுள்ள புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
"1. திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மகள் செந்தாமரை ஸ்டாலினின் நீலாங்கரை ஈ.சி.ஆர். சாலையில் அமைந்துள்ள இல்லத்தில் இன்று வருமான வரித்துறை அதிகாரிகள் சிலர் வலுக்கட்டாயமாக உள்ளே நுழைந்து காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.
2. பாஜக அரசு வருமான வரித்துறையைக் கத்தியாகவும் பகடைக்காயாகவும் பயன்படுத்துகிறது. வரும் 6-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், காரணமே இல்லாமல் இத்தகைய சோதனைகள் நடத்தப்படுகின்றன.
3. இந்தத் தேர்தலில் திமுக ஆட்சியமைக்கும் என்பதே பொதுமக்களின் கருத்தாகவும், கருத்துக்கணிப்புகளின் முடிவுகளாகவும் உள்ளன. 234 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும். ஊழல் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் கடந்த 10 ஆண்டுகளாக அதிகமாகியுள்ளன. பணியிடங்களில் பாலியல் துன்புறுத்தல் குறிப்பாக, டிஜிபி அந்தஸ்தில் உள்ள உயர் காவல் அதிகாரி மீதும் இத்தகைய புகார் உள்ளது. எனவே, திமுகவுக்கு ஆதரவாகவே மக்கள் உணர்வு உள்ளது.
4. உலகின் மிகப்பெரிய ஊழல்களில் முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் ஈடுபட்டுள்ளது குறித்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். தமிழகத்தில் நிலவும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் மற்றும் கடந்த 5 ஆண்டுகளாக நடைபெற்றுள்ள ஊழல்கள் குறித்து, பிரதமர் தமிழகத்தில் மேற்கொண்ட பிரச்சாரங்களில் பேசத் தவிர்த்ததை ஸ்டாலின் விமர்சித்தார். திமுகவுக்கு வாக்களிப்பதன் மூலம் தமிழ்நாட்டின் பெருமை, அடையாளம், தமிழ் கலாச்சாரத்தை மீட்போம் எனவும் ஸ்டாலின் பிரச்சாரங்களில் பேசினார்.
5. திமுகவின் பிம்பத்தைக் கெடுப்பதே அதிமுக - பாஜக கூட்டணியின் நோக்கம். எனவே, தேர்தலில் திமுகவுக்கு வெற்றி கிட்டும் என்பதை உணர்ந்து, திமுக தலைவர் மற்றும் திமுகவின் மீதான பிம்பத்தைக் கெடுக்க ஆளும் மத்திய பாஜக அரசு, வருமான வரித்துறையைத் தவறாகப் பயன்படுத்தி, ஸ்டாலினின் மகள் வீட்டில் சோதனை நடத்துகிறது.
6. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மகன் ஜெய்ஷாவின் நடவடிக்கைகளையும் திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
7. தமிழ்நாட்டில் திமுக தலைவர்களின் பிரச்சாரத்திற்கு மக்கள் மத்தியில் கிடைத்துள்ள பெரும் வரவேற்பைப் பொறுத்துக்கொள்ள முடியாமல், திமுகவை அச்சுறுத்த வருமான வரித்துறையைத் தவறாக பாஜக பயன்படுத்தி இத்தகைய சோதனைகள் நடத்தப்படுகின்றன.
8. ஆகவே, வாக்குகளைப் பெறுவதற்கோ அல்லது திமுகவின் பிம்பத்தைக் கெடுப்பதற்கோ இத்தகைய அமைப்புகளைத் தவறாகப் பயன்படுத்த வேண்டாம் என்று பாஜகவுக்குத் தேர்தல் ஆணையம் உத்தரவிட வேண்டும். பாஜகவின் இத்தகைய நடவடிக்கைகள் தேர்தல் நடத்தை விதிகளுக்கும் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் பிரிவு 123 (7) இன் கீழும் குற்றமாகும்.
9. இச்சட்டத்தின்படி, அரசிதழ் பதிவு பெற்ற அதிகாரி, நீதிபதிகள், மாஜிஸ்திரேட்டுகள், ராணுவம், காவல் அதிகாரிகள், சுங்க அதிகாரிகளைத் தேர்தல் ஆதாயத்துக்காகத் தவறாகப் பயன்படுத்துவது குற்றமாகும்.
10. முதல்வர் பழனிசாமியின் ஒப்புதலின்படியும், பாஜக - அதிமுக கூட்டணியின் வாய்ப்புகளை மேம்படுத்த பாஜக அரசின் ஆணையின்படியும் வருமான வரித்துறை செயல்படுகிறது.
11. வருமான வரித்துறை அதிகாரிகளின் செயல், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் பிரிவு 123 (7) இன் வரையறைக்கு உட்பட்ட ஊழல் நடைமுறையாகும், மேலும், அந்த அதிகாரிகள் அதிமுக - பாஜகவின் தேர்தல் வாய்ப்புகளின் நோக்கத்திற்காக தங்கள் அதிகாரங்களைத் தவறாகப் பயன்படுத்துகின்றனர். அவர்களின் நடவடிக்கைகள் மிரட்டல் மற்றும் அவதூறுக்கு உட்பட்டவை. இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள அனைத்து அதிகாரிகளும் சட்டப்படி விசாரிக்கப்பட வேண்டும்.
12. ஆகவே, தேர்தல் காலத்தில் வருமான வரித்துறை தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வதைத் தவிர்ப்பதற்கு இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் தலையிட்டு உத்தரவிட வேண்டும்".
இவ்வாறு அந்தப் புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.