

தமிழர்களின் அடையாளம், நாகரிகம், பண்பாடு ஆகியவற்றை அழிப்பதற்காக மத்திய பாஜக அரசு மிகுந்த தீவிரம் காட்டி வருகிறது என, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக, கே.எஸ்.அழகிரி இன்று (ஏப். 02) வெளியிட்ட அறிக்கை:
"தமிழகத்தில் தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் ஆகியோர், மத்திய பாஜக அரசின் மூலம் தமிழகத்தில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களைக் கூறி வாக்கு கேட்காமல், திமுக, காங்கிரஸ் கட்சிகள் மீது கடுமையான விமர்சனங்களை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.
2014 மக்களவைத் தேர்தலின்போது நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு வழங்குவோம், கறுப்புப் பணம், கள்ளப் பணத்தை ஒழிப்போம், விவசாயிகளின் வருமானத்தை இரு மடங்காகக் கூட்டுவோம் என்பது உள்ளிட்ட பல வாக்குறுதிகளை பிரதமர் மோடி வழங்கினார்.
ஆனால், 45 ஆண்டு காலங்களில் இல்லாத அளவுக்கு வேலையில்லாத் திண்டாட்டம் இந்தியாவில் தலைவிரித்தாடி வருகிறது. கரோனா காலத்தில் ஏற்பட்ட கடுமையான பாதிப்புகளால் இது பலமடங்கு கூடிவிட்டது. மக்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டு, ஏழ்மையில் சிக்கிக் கொள்கிற அவலநிலை ஏற்பட்டுள்ளது.
இந்தியப் பொருளாதாரக் கண்காணிப்பு அமைப்பின் அறிக்கையின்படி, கடந்த 2020 ஏப்ரல், ஆகஸ்ட் மாதங்களில் இந்தியாவில் மாத ஊதியம் பெறுகிற 12 கோடி பேர் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர். இது 15 கோடியாக தற்போது உயர்ந்திருப்பதாக அந்த அறிக்கை கூறுகிறது.
அமெரிக்காவில் மொத்த மக்கள்தொகையே 33 கோடிதான். ஆனால், அதில் பாதி அளவுக்கு இந்தியாவில் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர். பொது முடக்கத்திற்குப் பிறகு, இந்தியாவில் ஏழை மக்களின் எண்ணிக்கை 7.5 கோடியாக உயர்ந்துள்ளது. இதுதான் மோடி ஆட்சியின் சாதனையாகும்.
இந்திய மக்களின் வாழ்வாதாரத்தைப் பெருக்குவேன் என்று வாக்குறுதி கொடுத்த மோடி ஆட்சியில் அம்பானி, அதானி உள்ளிட்ட தொழிலதிபர்களின் சொத்துக்குவிப்புதான் நிகழ்ந்துள்ளது. மோடி ஆட்சியில் 100 கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு, கடந்த ஆண்டில் மட்டும் ரூபாய் 13 லட்சம் கோடியாக உயர்ந்திருப்பது மிகுந்த அதிர்ச்சியைத் தருகிறது.
ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு ரூபாய் 6 லட்சத்து 58 ஆயிரத்து 400 கோடியாக உயர்ந்துள்ளது. பொது முடக்கத்திற்குப் பிறகு ஒரு மணி நேரத்திற்கு ரூபாய் 90 கோடியை முகேஷ் அம்பானி சம்பாதித்து வருவதாக 2020ஆம் ஆண்டுக்கான ஐ.ஐ.எப்.எல். வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியப் பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி 9-வது முறையாக முதலிடத்தைப் பெற்று வருகிறார். உலகின் ஐந்தாவது பெரிய பணக்காரர் என்ற தகுதியையும் பெற்று வருகிறார்.
பிரதமர் மோடியின் மிகுந்த நம்பிக்கைக்குரியவர் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த கௌதம் அதானி. அவரது சொத்து மதிப்பு 2017-2020 வரை 6 மடங்கு உயர்ந்துள்ளது. 34 பில்லியன் டாலராக, அதாவது 5.37 பில்லியன் டாலரில் இருந்து 34 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.
அதேபோல, அம்பானியின் சொத்து மதிப்பு இதே காலத்தில் 3 மடங்கு அதிகரித்துள்ளது. 26.6 பில்லியன் டாலரிலிருந்து 74.4 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. இந்தியாவின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பில் 39 சதவிகித சொத்துகள் ஒரு சதவிகிதப் பணக்காரர்களிடம் குவிந்துள்ளன. அம்பானி, அதானி சொத்துக் குவிப்புகள் மோடி ஆட்சியில் அசுர அளவில் வளர்ந்திருப்பதற்கு யார் காரணம்? பிரதமர் மோடி இல்லை என்று மறுக்க முடியுமா?
கார்ப்பரேட் நிறுவனங்களின் நண்பராக பிரதமர் மோடியும், பாஜகவும் இருக்கிற காரணத்தால்தான் அவர்களுக்கு நன்கொடைகள் அதிக அளவில் வழங்கப்படுகின்றன. இதுவரை 3 கட்டங்களாக விற்பனை செய்யப்பட்ட தேர்தல் பத்திரங்களின் மதிப்பான ரூபாய் 6,128 கோடியில் 95 சதவிகிதம் பாஜகவுக்கு நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலானவை ரூபாய் 1 கோடி மதிப்பிலானது.
பாஜகவைப் பொறுத்தவரை, கார்ப்பரேட்டுகளின் நலனைப் பாதுகாப்பதில் காட்டுகிற அக்கறை தமிழகத்தின் வளர்ச்சியில் காட்டியதில்லை. இயற்கை சீற்றம், வறட்சி காரணமாக தமிழகம் பாதிக்கப்பட்ட போது, 2011-12ஆம் ஆண்டுகளில் அன்றைய முதல்வர் ஜெயலலிதா முதல் இன்றைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி வரை பலமுறை நிவாரண உதவி கோரியுள்ளனர்.
2015ஆம் ஆண்டு வெள்ளப்பெருக்கு, 2016இல் வார்தா புயல், 2017இல் ஒக்கி புயல், 2018இல் கஜா புயல் ஆகிய பாதிப்புகளிலிருந்து தமிழக மக்களுக்கு நிவாரணம் வழங்க அதிமுக அரசு கேட்ட மொத்த தொகை ரூபாய் 1 லட்சத்து 20 ஆயிரம் 500 கோடி.
ஆனால், பாஜக அரசு 6 கட்டங்களாகக் கொடுத்ததோ, ரூபாய் 5,778 கோடி. தமிழக அரசு கேட்ட தொகையில் 5 சதவிகிதத்திற்கும் குறைவாகத் தான் நிவாரண நிதியை மத்திய பாஜக அரசு வழங்கியது. இதுதான் பிரதமர் மோடியின் கூட்டுறவு கூட்டாட்சி. தமிழர்களுக்காக நீலிக் கண்ணீர் வடிக்கிற பிரதமர் மோடி, நிதியை ஒதுக்குவதில் தமிழகத்தை வஞ்சிக்கலாமா? பாரபட்சம் காட்டலாமா?
உலகில் தொன்மையான மொழி தமிழ் மொழி என்று கூறி திருவள்ளுவர், பாரதியார், ஒளவையார் ஆகியோரை மேற்கோள் காட்டுகிறார் பிரதமர் மோடி. நீட் தேர்வு, புதிய கல்விக் கொள்கை, மத்திய பணியாளர் தேர்வுகளில் இந்தித் திணிப்பு ஆகியவற்றைத் தொடர்ந்து செய்து வருகிற மத்திய பாஜக அரசு, தமிழ் மொழிக்காக பாரபட்சமாக நடந்து கொண்டதற்கு நிறைய சான்றுகளைக் கூறலாம்.
இந்தியாவில் சமஸ்கிருத மொழியைப் பரப்புவதற்காக கடந்த மூன்றாண்டுகளில் ரூபாய் 644 கோடியை பாஜக அரசு செலவழித்திருக்கிறது. ஆனால், செம்மொழித் தகுதி பெற்றுள்ள தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒடியா ஆகிய ஐந்து மொழிகளுக்கு மொத்தமாக ஒதுக்கப்பட்ட தொகை ரூபாய் 29 கோடி மட்டும்தான்.
இதை ஒப்பிடும்போது சமஸ்கிருதத்திற்கு 29 மடங்கு அதிகமாக ஒதுக்கப்பட்டுள்ளது. 2001 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, சமஸ்கிருத மொழி பேசுவோரின் எண்ணிக்கை 28 ஆயிரத்து 821 மட்டுமே. ஆனால், 7 கோடி மக்கள் பேசுகிற தமிழ் மொழி உள்ளிட்ட தென்மாநில மொழிகளுக்கு ஒதுக்கப்பட்;ட தொகை வெறும் ரூபாய் 29 கோடி தான்.
இதன்மூலம் சமஸ்கிருதம், இந்தி அல்லாத மொழிகளைச் சமமாக பாவிக்காமல் மாற்றாந்தாய் மனப்பான்மையோடு பாரபட்சம் காட்டுவதுதான் பிரதமர் மோடியின் தமிழ்ப் பற்றாகும்.
தமிழர்களின் அடையாளம், நாகரிகம், பண்பாடு ஆகியவற்றை அழிப்பதற்காக மத்திய பாஜக அரசு மிகுந்த தீவிரம் காட்டி வருகிறது. அதைத் தடுத்து நிறுத்த வேண்டிய பொறுப்பு மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு இருக்கிறது. நாம் எதை வேண்டுமானாலும் இழக்கலாம். ஆனால், 3 ஆயிரம் ஆண்டுகால வரலாற்றுப் பெருமை கொண்ட பண்பாடு, நாகரிக அடையாளத்தை எந்த நிலையிலும் இழக்க முடியாது.
இதை அழிப்பதற்கு பாஜக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் இந்தத் தேர்தலில் தீவிரமான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இதை முறியடிப்பதுதான் தமிழர்களின் ஒரே நோக்கமாக இருக்க வேண்டும். அதன்மூலமே தமிழக மக்களின் உரிமைகளைப் பாதுகாக்க முடியும்".
இவ்வாறு கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.