Published : 02 Apr 2021 01:30 PM
Last Updated : 02 Apr 2021 01:30 PM

ரெய்டு மூலம் திமுகவை முடக்கலாம் என பாஜக பகல் கனவு காண்கிறது: கே.எஸ்.அழகிரி

ஐடி ரெய்டு மூலம் திமுகவை முடக்கிவிடலாம் என பாஜக பகல் கனவு காண்கிறது என, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி விமர்சித்துள்ளார்.

திமுக தலைவர் ஸ்டாலின் மகள் செந்தாமரையின் இல்லத்திலும், அவரது கணவர் சபரீசன் அலுவலகம், அவரது நண்பர்களின் வீடு, அலுவலகங்களிலும் இன்று (ஏப். 02) காலை முதல் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறது. இதற்கு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக, கே.எஸ்.அழகிரி இன்று வெளியிட்ட அறிக்கை:

"வருகிற சட்டப்பேரவைத் தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற்றுவிட வேண்டுமென்ற நோக்கத்தின் இறுதியாக, கடைசி ஆயுதமாக வருமான வரித்துறையை பாஜக பயன்படுத்தி வருகிறது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மருமகன் சபரீசன், அண்ணாநகர் திமுக வேட்பாளர் எம்.கே.மோகன், கரூர் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி உள்ளிட்ட பலரது வீடுகளில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறது. இதன்மூலம் திமுகவை முடக்கி விடலாம் என பாஜக பகல் கனவு காண்கிறது.

இத்தகைய அடக்குமுறைகளை எதிர்கொள்கிற பேராண்மை மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக் கட்சிகளுக்கு இருக்கிறது என்பதில் எவருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. எதிர்க்கட்சிகளைப் பழிவாங்கும் நோக்கத்தோடு நடத்தப்படுகிற வருமான வரித்துறை சோதனைகளை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன்".

இவ்வாறு கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x