Published : 02 Apr 2021 01:27 PM
Last Updated : 02 Apr 2021 01:27 PM

ஜல்லிக்கட்டைத் தடை செய்தது திமுக-காங்கிரஸ் கூட்டணி; கொண்டுவந்தது நான்: பிரதமர் மோடி பேச்சு

மதுரை

''திமுகவினர் அவர்கள் குடும்பப் பிரச்சினையில் இந்த மதுரையை வன்முறை நகரம், கொலை நகரம் போன்றதொரு தோற்றத்தை உருவாக்கினார்கள். திமுகவும் காங்கிரஸும் திரும்பத் திரும்ப பெண்களை அவமானப்படுத்துகின்றன. இது எனக்கு ஆச்சர்யம் தரும் விஷயமல்ல அது அவர்கள் இயல்பு'' என்று மோடி பேசினார்.

மதுரையில் நடந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:

“திமுகவுக்கும் காங்கிரஸுக்கும் சரியான திட்டம் எதுவும் இல்லை என்றால் பேசக்கூடாது. பொய் சொல்வதை நிறுத்திக்கொள்ள வேண்டும். மக்கள் முட்டாள்களல்ல. அவர்கள் தங்களைத் தமிழ்ப் பண்பாட்டின் பாதுகாவலர்களாகச் சித்தரித்துக் கொண்டிருக்கிறார்கள்.

2011ஆம் ஆண்டு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில், திமுக அங்கம் வகித்த அமைச்சரவையில்தான் ஜல்லிக்கட்டைத் தடை செய்தார்கள். அதை காட்டுமிராண்டித்தனம் என்று ஒரு மூத்த அமைச்சர் சொன்னார். இப்போது சொல்லுங்கள். காங்கிரஸும் திமுகவும் அவர்கள் நிலையை நினைத்து வெட்கப்பட வேண்டும். 2016-17இல் இந்த மக்கள் ஜல்லிக்கட்டை நடத்த வேண்டும் என்று நினைத்தபோது அவர்கள் மனவேதனை எனக்குப் புரிந்தது. அதனால்தான் நான் உடனடியாக ஜல்லிக்கட்டு நடத்த அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்தேன்.

திமுகவும் காங்கிரஸும் நமக்கான பாதுகாப்பையோ, கண்ணியத்தையோ உத்தரவாதப்படுத்த முடியாது. சட்டம்- ஒழுங்கு அவர்களால் சீர்குலைந்தது. திமுகவினர் அவர்கள் குடும்பப் பிரச்சினையில் இந்த மதுரை வன்முறை நகரம், கொலை நகரம் போன்றதொரு தோற்றத்தை உருவாக்கினார்கள். திமுகவும் காங்கிரஸும் திரும்பத் திரும்ப பெண்களை அவமானப்படுத்துகின்றன. இது எனக்கு ஆச்சர்யம் தரும் விஷயமல்ல அது அவர்கள் இயல்பு.

மதுரை நகரம் தூங்கா நகரம். இந்த நகரம் எப்போதும் தூங்கியதே இல்லை. விழித்திருக்கும் நகரம் இது. இந்த நகரம் அரசியல் யதார்த்தத்திற்காகவும் விழித்திருக்கும். தேசிய ஜனநாயகக் கூட்டணியை ஆதரிக்கும் விஷயத்திலும் மதுரை விழிப்புடன் இருக்கும் என்று நம்புகிறேன்”.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x