

''ஐடி, சிபிஐ வைத்து அனைவரையும் மிரட்டுகிறார்கள். ஒன்றுமட்டும் மோடிக்குச் சொல்கிறேன். இது திமுக. மறந்துவிடாதீர்கள். நான் கருணாநிதியின் மகன். இந்த சலசலப்புக்கெல்லாம் அஞ்ச மாட்டேன். மிசாவையே, எமர்ஜென்சியையே பார்த்தவன் இந்த ஸ்டாலின். நீங்கள் எத்தனை ரெய்டு நடத்தினாலும் அதைப் பற்றி கிஞ்சிற்றும் நாங்கள் கவலைப்பட மாட்டோம்'' என்று ஸ்டாலின் பேசினார்.
திமுக தலைவர் ஸ்டாலின் மகள் செந்தாமரையின் இல்லத்திலும், அவரது கணவர் சபரீசன் அலுவலகம், அவரது நண்பர்களின் வீடு, அலுவலகங்களில் இன்று காலை முதல் வருமான வரித்துறை ரெய்டு நடத்தி வருகிறது. இதுகுறித்து ஸ்டாலின் தனது பிரச்சாரத்தில் குறிப்பிட்டுப் பேசினார்.
திமுக தலைவர் ஸ்டாலின் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிதாவது:
“நான் இன்று காலை சென்னையிலிருந்து புறப்பட்டு விமானம் மூலம் திருச்சி வந்து இறங்கினேன். அங்கு இருந்து சாலை மார்க்கமாக ஜெயங்கொண்டத்துக்கு வந்து கொண்டிருந்தேன். அப்போது எனக்கு ஒரு செய்தி வந்தது. என் மகள் செந்தாமரை வீட்டில் இன்று காலையில் 30க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் உள்ளே நுழைந்து ரெய்டு நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
வீட்டுக்கு முன் நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்போடு ரெய்டு நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இந்த அதிமுக அரசை காப்பாற்றிக் கொண்டிருப்பது பாஜக அரசு, மோடி அரசு. ஏற்கெனவே அதிமுக அரசு மீது முதல்வர் வீட்டில், அமைச்சர்கள் வீட்டில், தலைமைச் செயலாளர் வீட்டில் எல்லாம் ரெய்டு நடத்தியுள்ளனர். அந்தக் கட்சியை மிரட்டி உருட்டி வைத்துள்ளனர். அதனால் தமிழகத்தின் உரிமைகள் அனைத்தும் பறிக்கப்பட்டுள்ளன.
ஐடி, சிபிஐ வைத்து அனைவரையும் மிரட்டுகிறார்கள். ஒன்று மட்டும் மோடிக்குச் சொல்கிறேன். இது திமுக. மறந்துவிடாதீர்கள். நான் கருணாநிதியின் மகன். இந்த சலசலப்புக்கெல்லாம் அஞ்ச மாட்டேன். மிசாவையே, எமர்ஜென்சியையே பார்த்தவன் இந்த ஸ்டாலின். நீங்கள் எத்தனை ரெய்டு நடத்தினாலும் அதைப் பற்றி கிஞ்சிற்றும் நாங்கள் கவலைப்பட மாட்டோம்.
இன்னும் தேர்தலுக்கு 3 நாட்கள் உள்ளன. ரெய்டு நடத்தினால் திமுககாரன் வீட்டில் முடங்கிப்போய் கிடப்பான் என்று நினைக்கிறார்கள். அது அதிமுகவினரிடம் நடக்கும். அவர்கள் தான் மாநில உரிமைகளை எல்லாம் விட்டு காலில் விழுந்து கிடக்கலாம். ஆனால், நாங்கள் பனங்காட்டு நரிகள். இந்த சலசலப்புக்கெல்லாம் அஞ்ச மாட்டோம். எந்த சலசலப்புக்கும் அஞ்ச மாட்டோம். இதற்கெல்லாம் பதில் தரக்கூடிய நாள் தான் ஏப்ரல் 6 என்பதை மறந்துவிடக் கூடாது”.
இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.