Published : 02 Apr 2021 11:56 AM
Last Updated : 02 Apr 2021 11:56 AM

செந்தில் பாலாஜியைத் தொட்டுப் பார் தம்பி; இந்த மிரட்டலை தமிழ்நாட்டில் வைத்துக் கொள்ளாதீர்கள்: அண்ணாமலைக்கு கனிமொழி பதிலடி

கனிமொழி - அண்ணாமலை: கோப்புப்படம்

தேனி

செந்தில் பாலாஜியைத் தொட்டுப் பார் தம்பி என, பாஜக வேட்பாளர் அண்ணாமலைக்கு மக்களவை திமுக உறுப்பினர் கனிமொழி பதிலடி கொடுத்துள்ளார்.

கரூர் மாவட்டத்தில், அரவக்குறிச்சி தொகுதியில் பாஜக வேட்பாளராகக் களம் காணும் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை தீவிரமாகப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இரு தினங்களுக்கு முன், பிரச்சாரத்தில் அண்ணாமலை பேசும்போது, “திமுகவின் செந்தில் பாலாஜியை தூக்கிப் போட்டு மிதித்தால் பல் எல்லாம் வெளியே வந்துவிடும்" எனப் பேசினார். அவர் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், இது தொடர்பாக நேற்று (ஏப். 01) மாலை தேனி மாவட்டத்தில் பேசிய மக்களவை திமுக உறுப்பினர் கனிமொழி, "அதிமுக கூட்டணி வைத்திருக்கும் பாஜகவினர் எப்படிப்பட்டவர்கள் என்று ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. அரவக்குறிச்சியில் ஒரு வேட்பாளர் இருக்கிறார். அவர் அண்ணாமலை. பேர் அண்ணாமலை என வைத்துவிட்டதால், தன்னை ரஜினிகாந்த் என நினைத்துக்கொண்டார். அவர் பிரச்சாரம் செய்யும்போது எனக்கு இன்னொரு முகம் இருக்கிறது என்கிறார். நாமெல்லாம் பாட்ஷா பார்த்து வளர்ந்தவர்கள். அவர் இன்னொரு முகம் இருக்கிறது என அரவக்குறிச்சி தொகுதியில் சென்று சொல்கிறார். எனக்கு இன்னொரு முகம் இருக்கிறது. அதனைக் காட்ட வைத்துவிடாதீர்கள், செந்தில் பாலாஜியை நான் தாக்கிவிடுவேன் என்கிறார்.

நீ தொட்டுப் பார் தம்பி. திமுகவினர் மீது கை வைத்துப் பார். உங்களைப் போன்று எத்தனை பேரை பார்த்துவிட்டு வந்திருக்கிறோம். பெரியார் காலத்திலிருந்து எத்தனையோ அடிகள், எத்தனையோ ஏச்சுகள், எத்தனையோ மிரட்டல்களை எல்லாவற்றையும் ஊதித் தள்ளிவிட்டுதான் இந்தக் கட்சி இங்கு நின்று கொண்டிருக்கிறது.

திமுகவினரை, திமுகவைச் சேர்ந்த உடன்பிறப்புகளை யாரும் மிரட்டிவிட முடியாது. மிரட்டினீர்கள் என்றால், எழுந்து நின்றால் தாங்க மாட்டீர்கள். இந்த மிரட்டல் வேலையை தமிழ்நாட்டில் வைத்துக் கொள்ளாதீர்கள். ஒரு ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கே இளைஞர்கள் தெருவில் வந்து எப்படி நின்றார்கள் என்பதை மறந்துவிடாதீர்கள். இந்த மிரட்டலை இங்கே வைக்காதீர்கள், வேண்டாம். சொன்னால், அதற்கு மேல் நன்றாக இருக்காது.

எங்கே, யார் எதைப் பேச வேண்டும் என்று தெரிந்துகொண்டு பேச வேண்டும். நா காக்க வேண்டும். திருக்குறளைப் புதிதாகக் கண்டுபிடித்து உங்களின் பிரதமர் சொல்லிக்கொண்டிருக்கிறார். அதை முதலில் கற்றுக்கொள்ளுங்கள்" என கனிமொழி பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x