

திமுக தலைவர் ஸ்டாலின் மகளின் வீட்டில் ரெய்டு நடக்கும் நிலையில், இத்தகைய பூச்சாண்டி செயல்களுக்கு திமுக அஞ்சாது என, அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் ஸ்டாலின் மருமகன் சபரீசனின் நீலாங்கரை இல்லத்தில் இன்று (ஏப். 02) காலையில் இருந்து வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. இவர் ஸ்டாலின் மகள் செந்தாமரையின் கணவர் ஆவார். இதுவல்லாமல் திமுகவின் தலைமைக்கு ஆதரவாகத் தேர்தலில் பல பணிகளைச் செய்து வருகிறார். இவரது இல்லத்தில் ஐபேக்கின் அலுவலகமும் இயங்கி வருகிறது.
இந்நிலையில், வருமான வரித்துறை சோதனை குறித்து, திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
"ஒவ்வொரு கட்சியும் தங்கள் பணிகளை வேகமாக முடித்து வாக்குச்சாவடிகளை நோக்கிச் செல்லும் காலகட்டத்தில், திடீரென்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மகள் செந்தாமரை இல்லத்தில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றிருப்பது அரசியல் நோக்கத்துடன் நடத்தப்படுவதாகவே நான் அறிகிறேன்.
காரணம், தேர்தல் நெருக்கத்தில் இப்படிப்பட்ட சோதனைகளை நடத்தினால், ஸ்டாலினோ அவரின் குடும்பமோ திமுகவோ அதிர்ச்சியடைந்துவிடுவார்கள், தேர்தலில் தளர்ச்சி அடைந்துவிடுவார்கள், என்ற ஒரு தவறான கணக்கை மத்திய அரசு போட்டிருப்பதாகத்தான் நான் அறிகிறேன்.
இத்தகைய ரெய்டு பூச்சாண்டிகளுக்கெல்லாம் பயப்படக்கூடிய இயக்கம் அல்ல திமுக. ஒன்றை ஞாபகப்படுத்துகிறேன். மிசா காலத்தில், தலைவர் கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தி அம்மாளின் இல்லத்தில் இதே வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினார்கள். அவர்கள் உள்ளே சோதனை நடத்திக் கொண்டிருந்தார்கள். தலைவர் வெளியே உட்கார்ந்து உடன்பிறப்புகளுக்கு மடல் எழுதிக் கொண்டிருந்தார்.
அதைக்கூடப் பொருட்படுத்தாமல் வேண்டுமென்றே அந்த சோதனை செய்து கொண்டிருந்தவர்களுள் சில பேர், அதிலும் சென்னையில் இருந்தவர்கள் 'உங்கள் பேர்தான் கபாலியா? நீங்கள் இந்த வீட்டுக்கு என்ன வேண்டும்?' என்று கேலியாகப் பேசியதைக்கூட ஒரு காதில் வாங்கிக்கொண்டு மறுகாதில் விட்டுவிட்டு அஞ்சாமல் உடன்பிறப்புக்கு மடல் எழுதிய மகத்தான மடல் எழுதிய தலைவரின் மகன்தான் மு.க.ஸ்டாலின்.
அவர் வாழைக்குக் கன்றாகத் தோன்றவில்லை. ஆலுக்கு விழுதாக இறங்கியிருப்பவர். தந்தையை விட இரும்பு நெஞ்சம் கொண்டவர். எனவே, அவரை பயமுறுத்திவிடலாம், திமுகவை பயமுறுத்திவிடலாம், திமுக தேர்தலில் கலகலத்துப் போய்விடும் என்று நினைத்தால் இதைவிட அரசியல் அப்பாவித்தனம் வேறு எதுவும் இருக்க முடியாது.
சமீபத்தில்தான் எ.வ.வேலு வீடுகள், மற்ற இடங்களில் சோதனை நடைபெற்றது. அது முடிவதற்குள் செந்தாமரை இல்லத்தில் சோதனை செய்தால் எல்லாக் கட்சிகளும் நடுங்கிவிடுவார்கள் என நினைக்கக் கூடாது. இத்தகைய போக்கை மத்திய அரசு கடைப்பிடிப்பது ஜனநாயகமல்ல. நாணயமான அரசியலும் அல்ல. திமுக பொதுச் செயலாளர் என்ற முறையில் இதற்கு நான் கண்டனம் தெரிவிக்கிறேன்.
அடக்குமுறைக்கு, சிறைச்சாலைக்கு, தண்டனைகளுக்கு, இப்படிப்பட்ட ரெய்டுகளுக்கு திமுக பயந்திருந்தால் திமுக என்றைக்கோ செத்துப்போய் அந்த இடத்தில் புல் முளைத்திருக்கும். இப்படிப்பட்ட நடவடிக்கைகள் எங்களுக்கு மேலும் மன உறுதியையும், திட சிந்தனையையும் தரும்.
எனவே, ஸ்டாலினின் செல்ல மகள், ஒரே மகள் செந்தாமரை. ஸ்டாலின் செந்தாமரையிடம் அபரிமிதமான அன்பு கொண்டவர். அந்தக் குழந்தை வருத்தப்பட்டால் தலைவர் தாங்கமாட்டார் என்று மத்திய அரசு நினைத்திருக்கலாம். மகளுக்கு நேர்ந்ததை ஒரு கணம் நினைத்துப் பார்த்துவிட்டு மறுகணம் லட்சோபலட்சம் தொண்டர்களைக் கொண்ட திமுகவின் தலைவர்தான் ஸ்டாலின் என்ற நினைப்புடன் வீறுகொண்டு எழுந்து நிற்கக்கூடிய வீர சிங்கம் எங்கள் தலைவர். இத்தகைய போக்கை எந்த அரசாங்கமாக இருந்தாலும், கடைப்பிடிக்கக்கூடாது. ஜனநாயக நாட்டில் இத்தகைய போக்கு வளர்வது உகந்ததல்ல.
திமுகவினர் வீடுகளில் சோதனை செய்வது பயமுறுத்துவதற்கு. மற்ற கட்சியினர் வீடுகளில் சோதனை நடத்துவது கண்துடைப்பு. எப்படியாவது தமிழ்நாட்டில் ஒரேயொரு இடத்திலாவது வெற்றி பெற்று காலூன்றிவிட மாட்டோமா என்கிற ஒரு ஆதங்கம்தான் பாஜகவுக்கு இருக்கிறது. அதனை நான் குறை சொல்ல மாட்டேன். ஆனால், இப்படிச் செய்யக் கூடாது".
இவ்வாறு துரைமுருகன் தெரிவித்தார்.