தமிழகத்திலேயே ‘ஆர்டிபிசிஆர்’ பரிசோதனை செய்வதில் முதலிடம்: மதுரை அரசு மருத்துவக்கல்லூரி ஆய்வகம் சாதனை

தமிழகத்திலேயே ‘ஆர்டிபிசிஆர்’ பரிசோதனை செய்வதில் முதலிடம்: மதுரை அரசு மருத்துவக்கல்லூரி ஆய்வகம் சாதனை

Published on

கரோனா தொற்றை தடுப்பதில் அந்தத் தொற்று நோயைக் கண்டறிவதில் தமிழகத்திலே அதிகப்பட்சமாக இதுவரை 9 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்து மதுரை மருத்துவக்கல்லூரி நுண்ணுயிரியல் துறை ஆய்வகம் முதலிடம் பிடித்து சாதனை செய்துள்ளது.

மதுரை மருத்துவக்கல்லூரி நுண்ணுயிரியல் துறையில் கரோனா பரிசோதனை ஆய்வகம் (DHR-ICMR-VRDL) இயங்கி வருகிறது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் (ICMR) வழிகொட்டுதலின்படி கடந்த ஆண்டு மார்ச் 25ம் தேதி முதல் செயல்பட்டு வருகிறது.

கரோனா அறிகுறி இருப்பவர்களுக்கு RT-PCR பரிசோதனை செய்யப்படுகிறது. இந்த ஆய்வகம் இதுவரை 9 லட்சத்திற்கும் மேற்பட்ட RT-PCR பரிசோதனைகள் மேற்கொண்டு கரோனா தொற்றைத் தடுப்பதில் முக்கிய பங்கு ஆற்றியுள்ளது.

இந்த ஆய்கத்தில் மதுரை மட்டுமில்லாது திண்டுக்கல், விருதுநகர், ராஜபாளையம், ராமநாதபுரம், ராமநாதபுரம், சிவகங்கை, கோவை மற்றும் நீலகிரி போன்ற மற்ற மாவட்ட மாதிரிகளும் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

ஆய்வகத்தில், மருத்துவ அலுவலலர்கள், பட்டமேற்படிப்பு மாணவர்கள், ஆய்வக மேற்பார்வையாளர்கள், ஆய்வக நுட்பனர்கள், சுகாதார ஆய்வாளர்கள், கணினி இயக்குநர்கள், புள்ளியியலாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்கள் ஆகியோர் பணிபுரிகின்றனர்.

அவர்களை நேற்று மருத்துவமனை டீன் சங்குமணி ஆய்வகத்தைப் பார்வையிட்டு, அங்கு பணிபுரியும் பணியாளர்களை பாராட்டினார்.

டீன் சங்குமணி கூறுகையில், ‘‘இந்த ஆய்வகம் கடந்த ஆண்டு மார்ச் முதல் தற்போது வரை 24 மணி நேரமும் இயங்கி கொண்டிருக்கிறது. கரோனா தடுப்பு நடவடிக்கை வழிகாட்டுதலின் படி தற்போது ராணுவ ஆள் சேர்ப்பு முகாம்கள், கல்லூரி மாணவர்கள், சபரிமலை யாத்திரை செல்லும் பக்தர்களின் மாதிரிகள் உடனுக்கடன் பரிசோதனை செய்து முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.

ஆய்வக பரிசோதனை முடிவுகள் உடனுக்குடன் மாதிரி சேகரிக்கப்பட்டவருக்கு எஸ்எம்எஸ் மூலம் அவரவர் செல்போன் எண்களுக்கு அனுப்பப்படுகின்றன. மேலும், பரிசோதனை முடிவுகளை இணையத்திலும் பதவிறக்கம் செய்து கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அதனால், பொதுமக்கள் பரிசோதனை முடிவுகளுக்காக அழைக்கழிக்கப்படுவது தவிர்க்கப்பட்டுள்ளது. தமிழக மருத்துவக்கல்லூரி கரோனா ஆய்வகங்களிலேயே மதுரை மருத்துவக்கல்லூரி ஆய்வகம் 9 லட்சம் பரிசோதனை செய்து முதலிடம் பெற்றுள்ளது.

மற்ற மாவட்ட ஆய்வகப் பணியாளர்களுக்கு மதுரை மருத்துவக்கல்லூரி ஆய்வக நுட்புனர்கள் பயிற்சி அளிக்கின்றனர், ’’ என்றார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in