

தேர்தலில் கரோனா பாதுகாப்புநடவடிக்கையாக முகக் கவசம்,கவச உடை மற்றும் உடல் வெப்பபரிசோதனை கருவிகள் உள்ளிட்டவற்றை சுகாதாரத் துறை சார்பில் ரூ.54 கோடியில் கொள்முதல் செய்ய, நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
பிஹார் தேர்தலில் கரோனா காலகட்டத்தில்தான் அதிக அளவில் வாக்குகள் பதிவானது.தமிழகத்திலும் மக்கள் வாக்களிக்க ஆர்வமாக உள்ளதால் அதிக வாக்குகள் பதிவாகும் எனஎதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலில்கரோனா பாதுகாப்பு நடவடிக்கையாக முகக் கவசம், கவச உடை மற்றும் வெப்ப பரிசோதனை கருவிகள் ஆகியவற்றை கொள்முதல் செய்ய ரூ.54 கோடியே 12 லட்சம் சுகாதாரத் துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு வாக்குச்சாவடி மையத்திலும் 12 பிபிஇ கரோனா கவச உடை வழங்கப்படுவதோடு, கூடுதலாக பிபிஇ கவச உடை இருப்பும் வைக்கப்படும்.
ஒரு வாக்குச்சாவடியில் குறைந்தபட்சம் ஒரு காவல்துறை அதிகாரி மற்றும் முன்னாள் அரசு அதிகாரிகள் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட உள்ளனர். ஏப்.4 ம்தேதி இரவு 7 மணியுடன் பிரச்சாரம் முடிந்தவுடன் வெளியூர்களில் இருந்து வந்தவர்கள், அந்த தொகுதியில் வசிக்காதவர்கள் வெளியேற வேண்டும்.
இவ்வாறு சத்யபிரத சாஹூ கூறினார்.