Published : 02 Apr 2021 03:12 AM
Last Updated : 02 Apr 2021 03:12 AM

வீடு வீடாக வேட்பாளருடன் 5 பேருக்கு மேல் வாக்கு சேகரிப்பு; சுட்டிக்காட்டாத ஊடக கண்காணிப்புக் குழு: கண்டுகொள்ளாத தேர்தல் அதிகாரிகள்

வீடு வீடாக வாக்கு சேகரிக்க வேட்பாளருடன் சேர்த்து 5 பேர் மட்டுமே செல்ல வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில், விதிகளை மீறி பெரும்பாலான வேட்பாளர்கள் 5 பேருக்கு மேல் சென்று வாக்கு சேகரித்து வருகின்றனர். அதை ஊடக கண்காணிப்பு குழுக்களும், தேர்தல் அதிகாரிகளும் கண்டுகொள்ளவில்லை என பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.

கடந்த ஓராண்டாக இந்தியாவில் கரோனா தொற்று பரவி வருகிறது. கடந்த ஒரு மாதமாக தொற்று மேலும் அதிகரித்து வருகிறது. இதை கருத்தில் கொண்டு தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான தேர்தலை கடந்த பிப்ரவரி மாதம் அறிவித்த தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, வேட்புமனு தாக்கலின்போது, வேட்பாளருடன் சேர்த்து 3 பேர், வீடு வீடாக வாக்கு சேகரிக்கும்போது வேட்பாளருடன் சேர்த்து 5 பேர் மட்டுமே செல்ல அனுமதிக்கப்படும் என்று அறிவித்திருந்தார்.

வேட்புமனு தாக்கலின்போது வேட்பாளருடன் சேர்த்து 3 பேர் வருவதை அந்தந்த தேர்தல் நடத்தும் அதிகாரிகள் உறுதி செய்தனர். ஆனால் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்கும்போது வேட்பாளருடன் சேர்த்து 5 பேர் மட்டுமே செல்ல வேண்டும் என்ற விதிமுறை பெரும்பாலான இடங்களில் பின்பற்றப்படவில்லை.

அங்கீகரிக்கப்பட்ட மற்றும் பதிவு செய்யப்பட்ட கட்சிகளுடனான ஆலோசனை கூட்டங்களில் மட்டும் வலியுறுத்திய தேர்தல் அதிகாரிகள், இத்தகைய விதிமீறல்கள் தொடர்பாக தேர்தல் விதிமீறல் வழக்குகளை பதிவு செய்யவில்லை. இவ்வாறு விதிகளை மீறி வீடு வீடாக சென்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பது குறித்த காட்சிகள் அச்சு மற்றும் மின்னணு ஊடகங்களில் வெளிவந்தவண்ணம் உள்ளன. அவற்றில் வரும் விளம்பரங்கள், விளம்பரத்தில் உள்ள விதிமீறல்களை கண்காணித்து உயரதிகாரிகள் மற்றும் தேர்தல் பொது மற்றும் செலவின பார்வையாளர்களுக்கு அனுப்பும் ஊடக கண்காணிப்பு குழுக்கள், வீடு வீடாக பிரச்சாரத்தில் ஈடுபடுவோரின் எண்ணிக்கை குறித்த அறிக்கையை அனுப்புவதில்லை என பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை, 15 ஆயிரத்து 879, சென்னையில் 6 ஆயிரத்து 255 ஆக உயர்ந்துள்ளது. கல்வி நிலையங்கள், ஆலயங்கள், பயிற்சி நிலையங்கள், குடும்ப நிகழ்ச்சிகள், பணி செய்யுமிடங்கள் போன்றவற்றில் இருந்து கரோனா தொற்று பரவியதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. ஆனால் தேர்தல் பிரச்சாரத்தில் கூடும் மக்களால் தொற்று பரவுவது குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை.

போதுமான அலுவலர்கள் இல்லை

தேர்தல் விதிமீறல் தகுந்த ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டால், வேட்பாளர் வெற்றி பெற்றாலும் அது செல்லாது. இந்நிலையில் வீடு வீடாக வாக்கு சேகரிப்போர் எண்ணிக்கை தொடர்பான விதிமீறல்களை தடுக்க நடவடிக்கை எடுக்காதது மற்றும் அது தொடர்பாக வழக்கு பதிவு செய்யாதது தொடர்பாக தேர்தல் அதிகாரிகளிடம் கேட்டபோது, "இருக்கும் பணியாளர்களைக் கொண்டு தேர்தல் மற்றும் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை சமாளித்து வருகிறோம். இதுபோன்ற விதிமீறல்கள் தொடர்பாக வழக்கு பதிவு செய்ய தொடங்கினால், ஆயிரக்கணக்கான வழக்குகளை பதிவு செய்ய வேண்டியிருக்கும். அதற்கு போதுமான அலுவலர்கள் இல்லை" என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x