Published : 02 Apr 2021 03:12 AM
Last Updated : 02 Apr 2021 03:12 AM

பெண்களை தரக்குறைவாக பேசும் திமுகவுக்கு தக்க பதிலடி கொடுங்கள்: கோவை பிரச்சார கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி வேண்டுகோள்

பெண்களை தரக்குறைவாக பேசும் திமுகவுக்கு தக்க பதிலடியை மக்கள் அளிக்க வேண்டும் என கோவை தேர்தல் பிரச்சார கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.

கோவையில் அதிமுக சார்பில் தொண்டாமுத்தூரில் போட்டியிடும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, அம்மன் கே.அர்ச்சுணன் (கோவை வடக்கு), கே.ஆர்.ஜெயராமன் (சிங்காநல்லூர்), வி.பி.கந்தசாமி (சூலூர்), செ.தாமோதரன் (கிணத்துக்கடவு), பி.ஆர்.ஜி.அருண்குமார் (கவுண்டம்பாளையம்), ஏ.கே.செல்வராஜ் (மேட்டுப்பாளையம்), அமுல் கந்தசாமி (வால்பாறை), பொள்ளாச்சி ஜெயராமன் (பொள்ளாச்சி), ப.தனபால் (அவிநாசி), பாஜக சார்பில் போட்டியிடும் வானதி சீனிவாசன் (கோவை தெற்கு) ஆகியோரை ஆதரித்து முதல்வர் கே.பழனிசாமி கோவை கொடிசியாவில் நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பகல் கனவு கண்டுகொண்டிருக்கிறார். அதிமுக கூட்டணி வலிமையான கூட்டணி, வெற்றிகூட்டணி. எத்தனை அவதாரம் எடுத்தாலும் அவரால் வெல்ல முடியாது. குடும்ப அரசியல் செய்யும் கட்சி அல்ல அதிமுக. நாட்டு மக்களுக்காக உழைக்கும் கட்சி. அதிமுகவில் ஊழல் என்று ஸ்டாலின் கூறி வருகிறார். திமுக முன்னாள் அமைச்சர்கள் 13 பேர் மீது ஊழல் வழக்கு நடைபெற்று வருகிறது. இந்த வழக்குகளில் நீதிமன்றத்தில்வாதாடி வெளியே வர வேண்டியதுதானே. ஏன் வாய்தா வாங்கிக் கொண்டிருக்கிறீர்கள்.

இவ்வளவு அழுக்கை வைத்துக்கொண்டு எங்கள் மீது புழுதிவாரி தூற்றிக் கொண்டிருக்கின்றனர். குற்றச்சாட்டுகள் குறித்து ஸ்டாலின் விவாதிக்க தயார் என்றால், கோவை கொடிசியாவில் இதே இடத்தில் வைத்து பதில் தர தயாராக உள்ளேன். மக்கள் நீதிபதியாக இருந்து நீதி வழங்கட்டும்.

இந்தியாவில் ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே ஆட்சி திமுக ஆட்சிதான். கண்ணுக்கு தெரியாத காற்றில் கூட ஊழல் செய்த கட்சி திமுக. அந்த வழக்கை மத்திய அரசு தூசி தட்டி எடுத்துள்ளது. கண்ணை இமை பாதுகாப்பதுபோல சிறுபான்மையினரைப் பாதுகாப்பது அதிமுக அரசு. நான் முதல்வராக பொறுப்பேற்ற பிறகு 4 ஆண்டுகளாக தமிழகத்தில் ஜாதிச் சண்டை, மதச் சண்டை கிடையாது. அதிமுக அரசுதான் உங்களுக்கு பாதுகாப்பு அளித்துக் கொண்டிருக்கிறது. அவரவர் மதம் அவரவருக்கு புனிதமானது. யாரையும் புண்படுத்தும் நோக்கம் எங்களுக்கு கிடையாது. எனவே, யாருக்கும் எந்ததீங்கும் வர விடமாட்டோம். அனைவரும் அச்சமின்றி வாழலாம்.

திமுகவினர் பெண்களை தரக்குறைவாக பேசுவார்கள். தொடர்ந்து பேசி வருகின்றனர். தயாநிதிமாறன் பிரதமரைப் பற்றியும், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவைப் பற்றியும் பேசியுள்ளார். திண்டுக்கல் லியோனியும் பெண்களைப் பற்றி அவதூறாக பேசியுள்ளார். அவர்களின் கட்சித் தலைவர் ஸ்டாலின் இதைக் கண்டிக்கவில்லை. கண்டிக்க திராணி இல்லாத தலைவர் மு.க.ஸ்டாலின். அதற்கு தகுந்த பதிலடியை மக்கள் கொடுக்க வேண்டும். திமுகவுக்கு இது இறுதி தேர்தலாக இருக்க வேண்டும். பெண்கள் பாதுகாப்பாக வாழ அதிமுக அரசு தொடர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

கூடலூர்

நீலகிரி மாவட்டம் கூடலூர் தொகுதி அதிமுக வேட்பாளர் பொன்.ஜெயசீலனை ஆதரித்து முதல்வர் பழனிசாமி பேசும்போது, "சிறந்த நிர்வாகம், ஏராளமான புதிய திட்டங்களால் தமிழகம் வெற்றிநடைப் போடுகிறது. தமிழகம் முன் மாதிரி மாநிலமாக திகழ்கிறது. நான் உங்களில் ஒருவன், எப்போது வேண்டுமானால் என்னை சந்திக்கலாம்; ஆனால் ஸ்டாலின் வீட்டு கேட்டை கூடதொட முடியாது’’ என்றார். ஹெலிகாப்டர் மூலமாக குன்னூர் சென்ற முதல்வர், வாகனத்தில் நின்றபடி அதிமுக வேட்பாளர் கப்பச்சி டி.வினோத், உதகை பாஜக வேட்பாளர் மு.போஜராஜன் ஆகியோரை ஆதரித்து பேசும்போது, ‘‘தமிழகத்தில் 2006-2007-ம் ஆண்டுகளில் திமுகவின் இருண்ட ஆட்சி இருந்தது. ஜெயலலிதா ஆட்சி வந்தபோது, தடையில்லா மின்சாரம் வழங்கியது. இப்போது மின்மிகை மாநிலமாக உள்ளது.

திமுக குடும்ப உறுப்பினர்களுக்கு மட்டுமே பதவி வழங்கும். அதிமுகவில் சாதாரண தொண்டன் கூட முதல்வராகலாம். பொய் பேசி மக்களை ஏமாற்றி முதல்வராகும் கனவை ஸ்டாலின் காண்கிறார். பெட்டியில் போடும் பெட்டிசனுக்கு தீர்வு காண்பதாக கதை விடுகிறார். அதிமுக அரசு 9 லட்சம் மனுக்கள் பெற்று, 5 லட்சம் மனுக்களுக்கு தீர்வு கண்டுள்ளோம். இவ்வாறு அவர் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x