

புதுச்சேரியில் வாக்காளர்களின் செல்போன் எண்களை முறைகேடாக பெற்று, பாஜகவினர் குறுஞ்செய்தி அனுப்பியதாக புகார் எழுந்த விவகாரத்தில் ஆதார் ஆணையம், தேர்தல் ஆணையம் விளக்கம் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புதுச்சேரியில் வாக்காளர்களின் செல்போன் எண்கள் போன்ற தனிநபர் தகவல்களை ஆதார் ஆணையத்திடம் இருந்து முறைகேடாக பெற்று புதுச்சேரி பாஜக சார்பில் வாட்ஸ்அப் குழுக்கள் அமைத்து பிரச்சாரத்தில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இதுகுறித்து சிறப்பு புலனாய்வு விசாரணை கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் புதுச்சேரி தலைவர் ஆனந்த், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது புதுச்சேரி பாஜக சார்பில், ‘‘வாக்காளர்களின் ஆதார் விவரங்கள் திருடப்படவில்லை. வீடு வீடாகச் சென்று செல்போன் எண்கள் பெறப்பட்டன’’ என்று தெரிவிக்கப்பட்டது.
மனுதாரர் எதிர்ப்பு
இதற்கு மனுதாரர் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ‘‘ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்ட செல்போன் எண்களுக்கு மட்டுமே பாஜகவின் குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளன. இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை’’ என்று தெரிவிக்கப்பட்டது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் கூறியதாவது:
தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பிய பிறகும், பாஜகவினர் கடந்த மார்ச் 29-ம் தேதி வரை வாக்காளர்களின் செல்போன் எண்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பி பிரச்சாரத்தில் ஈடுபட்டது தனிமனித உரிமை மீறல்.
தவிர, ஆதாருடன் இணைக்கப்பட்ட செல்போன் எண்களுக்கு மட்டுமே குறுஞ்செய்தி வந்துள்ளதால் வாக்காளர்களின் விவரங்கள் கசிந்தது எப்படி என்பது குறித்து ஆதார் ஆணையமும், உடனடி நடவடிக்கை எடுக்காதது ஏன் என்பது குறித்து தேர்தல் ஆணையமும் விளக்கம் அளிக்க வேண்டும்.
இவ்வாறு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை 6 வார காலத்துக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டுள்ளனர்.