Published : 02 Apr 2021 03:12 AM
Last Updated : 02 Apr 2021 03:12 AM

‘துக்ளக்’ ஆசிரியருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர முகாந்திரம் இல்லை: அரசு தலைமை வழக்கறிஞர் மறுப்பு

நீதிபதிகள் நியமனம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக ‘துக்ளக்’ ஆசிரியர் குருமூர்த்திக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர முகாந்திரம் இல்லை என்பதால் அனுமதி வழங்க முடியாது என அரசு தலைமை வழக்கறிஞர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

கடந்த ஜனவரி 14-ம் தேதி சென்னையில் நடந்த ‘துக்ளக்’ ஆண்டு விழாவில் பேசிய அதன் ஆசிரியர் எஸ்.குருமூர்த்தி, உச்ச நீதிமன்ற மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனம் தொடர்பாக சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதையடுத்து தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்து குருமூர்த்தி மறுநாளே ட்விட்டரில் பதிவிட்டு இருந்தார். அதில், நீதிபதி பதவிக்கு விண்ணப்பிப்போர் என குறிப்பிடுவதற்கு பதிலாக நீதிபதிகள் என தவறுதலாக கூறி விட்டதாக தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இந்த விவகாரத்தில் குருமூர்த்திக்கு எதிராக குற்றவியல் ரீதியாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர அனுமதி கோரி வழக்கறிஞர் எஸ்.துரைசாமி, அரசுதலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணிடம் மனு தாக்கல் செய்தார். இதையடுத்து இந்த மனுதொடர்பாக எஸ்.குருமூர்த்தி விரிவான பதில்மனு தாக்கல் செய்திருந்தார்.

இதுதொடர்பான விசாரணை அரசு தலைமை வழக்கறிஞர் விஜய்நாராயண் முன்பாக நடந்தது. மனுதாரரான எஸ்.துரைசாமி சார்பில் வழக்கறிஞர் வி.இளங்கோவனும், எஸ்.குருமூர்த்தி சார்பில் வழக்கறிஞர் எஸ்.ரவியும் ஆஜராகி வாதிட்டனர். இருதரப்பு வாதங்களையும் கேட்ட அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் நேற்று முன்தினம் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:

சட்டரீதியாக தப்புகின்றனர்

எஸ்.குருமூர்த்தி தாக்கல் செய்துள்ள பதில்மனுவில், ‘துக்ளக்’ ஆண்டு விழாவில், ஊழல் அரசியல்வாதிகள் குறித்து ஒரு வாசகர் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்கும்போது, ‘ஓர் எழுத்தாளராகவும், மூத்த இதழியலாளராகவும், சார்ட்டர்டு அக்கவுன்டன்டாகவும், கார்ப்பரேட் நிறுவனங்களின் ஆலோசகராகவும் உள்ள எனது நீண்டநெடிய அனுபவத்தில் ஊழலுக்குஎதிராகவும், ஊழல் அரசியல்வாதிகளுக்கு எதிராகவும் சட்ட ரீதியாக போராடி வருவதாகவும், ஆனால் நீதித்துறை விசாரணையில் உள்ள சில இடர்ப்பாடுகள் மற்றும் தாமதத்தை ஊழல்வாதிகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி சட்ட ரீதியாக தப்பித்து விடுகின்றனர் என்பதை சுட்டிக்காட்டும் வகையிலும்தான் பேசினேன்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் மறுநாளே தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்துள்ளேன் என்றும், நீதித்துறை மற்றும் நீதித்துறை நிர்வாகத்தை அவமதிக்கும் எந்த உள்நோக்கத்துடனும் கருத்து தெரிவிக்கவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

உச்ச நீதிமன்றம் பல்வேறு வழக்குகளில் பிறப்பித்துள்ள உத்தரவுகளின்படி, எதிர்மனுதாரர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர முகாந்திரம் இல்லை எனகருதுகிறேன்.

எனவே, எதிர்மனுதாரரான ‘துக்ளக்’ ஆசிரியர் எஸ்.குருமூர்த்திக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர அனுமதி அளிக்க முடியாது. இவ்வாறுஅதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x