

தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்ததும் பெட்ரோல், டீசல் விலை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வரப்படும் என தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி உறுதி தெரிவித்தார்.
ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் திருமகன் ஈவெராவை ஆதரித்து, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி பேசியதாவது:
தமிழகத்தில் திமுக கூட்டணி வெற்றி பெற்று ஸ்டாலின் முதல்வராகப் பொறுப்பேற்ற பின்னர்,முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்கின் பொருளாதார கொள்கையை பின்பற்றி விலைவாசியைக் குறைப்போம். பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டிக்குள் வருமாறு மாற்றியமைப்போம். இதற்கு முன்னர் பிரதமர் பதவி வகித்தவர்கள், தேர்தல் நேரத்தில்கூட உள்ளூர் அரசியல் பேச மாட்டார்கள். ஆனால், தற்போதைய பிரதமர் தேர்தல் பிரச்சாரத்தில் உள்ளூர் அரசியல் பேசுகிறார். காங்கிரஸ் கட்சியில் இந்திரா காந்தி, சோனியா காந்தி ஆகிய இருவர் தலைவர் பதவியை வகித்துள்ளனர்.
ஆனால், பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் போன்றவற்றில் எப்போதும் பெண்கள் தலைவராக இருந்ததில்லை. காங்கிரஸ் கட்சியும், திமுகவும் பெண்களை மதிக்காத கட்சி என்று மோடி கூறுகிறார். மோடி பெண்களுக்கு மரியாதை கொடுப்பவர் என்று அவரது மனைவி கூறுவாரா?
தமிழை காப்பாற்ற, தமிழர்களின் பண்பாடுகளைக் காப்பாற்ற இந்த தேர்தல் இறுதி யுத்தமாகும். இதில் உண்மையான, முழுமையான வெற்றி பெற வேண்டும். 26 லட்சம் பேர் மட்டுமே படிக்கும் சமஸ்கிருதத்துக்கு ரூ.640 கோடி ஒதுக்கும் மத்திய அரசு, 8 கோடிபேர் பேசும் தமிழ் மொழி வளர்ச்சிக்கு ரூ.7 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்கிறது.
பாஜக, ஆர்.எஸ்.எஸ். அமைப்புகள் நாடு முழுவதும் கலாச்சார படையெடுப்பை நடத்துகின்றன. இந்தியாவில் ஒரே நாடு, ஒரே மொழி பேசும் கொள்கை எடுபடாது. பிரதமர் மோடியின் முகமாகவும், குரலாகவும் அதிமுக செயல்படுகிறது. அதிமுக அரசு ஊழல் கறை படிந்த அரசாங்கமாக விளங்குகிறது. இவ்வாறு அவர் பேசினார்.