

திருச்செந்தூரில் சட்டப்பேரவைத் தொகுதியில் மநீம, சமக கூட்டணி வேட்பாளராக போட்டியிடும் மு.ஜெயந்தியை ஆதரித்து, திருச்செந்தூர், நாசரேத் உள்ளிட்ட இடங்களில் சமக தலைவர் சரத்குமார் பேசியதாவது:
கமலும், நானும் உழைப்பால் உயர்ந்து, இந்த இடத்துக்கு வந்துள்ளோம். உழைத்து உயர்ந்தவர்களெல்லாம் ஒன்று சேர்ந்திருக்கிறோம். இரு திராவிட இயக்கங்களுக்கும் மாற்றாக ஒரு மாற்றத்தை கொண்டுவர வேண்டும் என்ற அடிப்படையில் நாங்கள் இணைந்து இந்த தேர்தலை சந்திக்கிறோம்.
இன்று ஒரு வேட்பாளர் ரூ.50 கோடி செலவு செய்தால்தான் சட்டப்பேரவைக்கு செல்ல முடியும். அதுபோல ரூ.100 கோடி செலவழித்தால்தான் மக்களவைக்குசெல்ல முடியும் என்ற நிலையைஉருவாக்கியுள்ளனர். இதை மாற்றவேண்டும் என்பதற்காகத்தான் இணைந்திருக்கிறோம்.
வாக்குக்கு பணம் கொடுத்தால் தயவுசெய்து வாங்காதீர்கள். அடுத்த தலைமுறை சீரழிந்து விடும்.உழைக்கின்ற பணமே நிலைக்கும். மாற்றத்துக்காக நல்ல பல திட்டங்களை வைத்திருக்கிறோம். எனவே, மாற்றத்துக்காக எங்களுக்கு வாய்ப்பு தாருங்கள் என்றார்.
இதன் பின்பு, நேற்று மாலைதென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் அவர் பிரச்சாரம் செய்ய இருந்தார். ஆனால், உடல்நிலை சரிஇல்லை என்று கூறி, நேற்றுமாலை சரத்குமாரின் பிரச்சாரம்ரத்து செய்யப்பட்டது.