Published : 02 Apr 2021 03:12 AM
Last Updated : 02 Apr 2021 03:12 AM

‘கருணாநிதியின் மகன்’ என்றத் தகுதியை தவிர வேறு எதுவும் இல்லை; திமுகவின் கடைசி பெஞ்ச் மாணவர் ஸ்டாலின் : பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆவேசம்

நன்றாக படிக்கும் மாணவர்தான் கிளாஸ் லீடராக இருப்பார். ஸ்டாலின் கடைசி பெஞ்ச் மாணவர். இவருக்கு, ‘கருணாநிதி மகன்’ என்றத் தகுதி மட்டுமே உள்ளது என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார்.

பாமக வேட்பாளர்கள் சிவகுமார் (மயிலம்), ராஜேந்திரன் (செஞ்சி) ஆகியோரை ஆதரித்து விழுப்புரம் மாவட்டம் கூட்டேரிப்பட்டு, நாட்டார்மங்கலம், செஞ்சி, மேல்மலையனூரில் நேற்று மாலை பாமகஇளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் பரப்புரை வாகனத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

வாக்காளர்களிடையே அவர்பேசியதாவது: முதல்வர் வேட்பாளர் பழனிசாமி விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர். ஆனால், ஸ்டாலின் விவசாயி அல்ல; அவர் அரசியல் வியாபாரி. திமுக ஒரு அரசியல் கட்சி அல்ல; அது ஒரு கம்பெனி.

திமுகவை அண்ணா தொடங்கியது இந்த ஒரு குடும்பத்துக்காகவா ?திமுகவில் உழைத்தவர்கள் ஓரங்கட்டப்பட்டுள்ளனர். மாவட்டந் தோறும் திமுகவின் நிலைமை இதுதான். நன்றாக படிக்கும் மாணவர்தான் கிளாஸ் லீடராக இருப்பார். ஸ்டாலின் கடைசி பெஞ்ச் மாணவர். இவருக்கு, ‘கருணாநிதி மகன்’ என்றத் தகுதி மட்டுமே உள்ளது.

முதல்வர் பழனிசாமி விவசாயி என்பது மட்டுமல்ல. அவர் மூலம் சமூகநீதி கிடைக்கும் என்றுதான் அதிமுகவுடன் பாமக கூட்டணி வைத்தது. வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு கிடைக்க அமைச்சர் சி.வி.சண்முகமும் முயற்சித்தார்.

தென் மாவட்டங்களுக்குச் சென்ற ஸ்டாலின். ‘இச்சட்டத்தை ஆட்சிக்கு வந்தவுடன் நீக்குவேன்’ என்று பேசியுள்ளார். இதை இங்கு பேச வேண்டியதுதானே!

பெண்களைக் கொச்சைப்படுத்தும் கட்சி திமுக. தாயை மதிக்கத் தெரியாத கட்சி. திமுகவின் கொள்கைப் பரப்புச் செயலாளர் ஆ.ராசா முதல்வரின் தாயை கொச்சைப்படுத்தி பேசுகிறார். நடிகை நயன்தாராவை தவறாக பேசியதால் ராதாரவி உடனே திமுகவில் இருந்து நீக்கப்பட்டார். ஆனால்ஆ.ராசா மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. திமுகவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை.

எதிர்கட்சித் தலைவராக செயல்பட இயலாதவர் ஸ்டாலின். சட்டசபையில் வெளிநடப்பு செய்ததுதான் இவர் செய்தது; சட்டையை கிழித்ததைத் தவிர வேறு ஒன்றும் கிழிக்கவில்லை. ஸ்டாலினுக்கு முதல்வர் வெறி பிடித்துவிட்டது. திமுகவை நம்பாமல் பிரசாந்த் கிஷோரை ஸ்டாலின் நம்புகிறார். நாங்கள் மக்களை நம்புகிறோம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x