

திமுகவின் அத்தியாயம் முடிந்துவிட்டது என சேலம் தேர்தல் பிரச்சாரத்தில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் முதல்வர் பழனிசாமியை ஆதரித்து, பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நேற்று முன்தினம் எடப்பாடியில் பிரச்சாரம் மேற்கொண்டார். மேலும், மேட்டூர் தொகுதி பாமக வேட்பாளர் சதாசிவத்தை ஆதரித்து, கொளத்தூர் அடுத்த கருங்கல்லூர், சேலம் மேற்கு தொகுதி பாமக வேட்பாளர் அருளை ஆதரித்து சேலம் சூரமங்கலம் அடுத்த புதுரோடு ஆகிய இடங்களில் அவர் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:
தமிழகத்தில் 7.5 சதவீதம் என்றால் எல்லோருக்கும் தெரியும். அது அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர வழங்கப்பட்டஒதுக்கீடு. 10.5 சதவீதம் என்பது வன்னியர்களுக்கான உள் ஒதுக்கீடு. இதன் மூலம் மாணவ, மாணவிகள் நல்ல தரமான கல்வி பெற்று, வெளிநாடுகளுக்கும் சென்று வேலைவாய்ப்பு பெற வேண்டும்.
அனைத்து சமுதாயத் தினருக்கும் இட ஒதுக்கீடு கிடைக்க வேண்டும். எல்லா சமுதாய மக்களும் படித்து வேலைவாய்ப்பு பெற வேண்டும். அதற்காக தொடர்ந்து பாடுபடுவேன்.
சேலத்தில் நிலம் அபகரிப்பு சம்பவத்தில் 6 கொலைகள் நடந்தது. திமுக ஆட்சிக்கு வந்தால் நிலப்பறிப்புதான் நடைபெறும். தமிழகத்தில் 16 மதுபான ஆலைகள் உள்ளன. அதில், 7 ஆலைகளை திமுக-வினர் வைத்துள்ளனர். மதுவால் தமிழகத்தில் ஆண்டுக்கு 2 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். மதுவை எதிர்த்து, 40 ஆண்டுகளாக போராடுகிறேன்.
தமிழகம் அமைதிப் பூங்காவாக இருந்து வருகிறது. முதல்வர் பழனிசாமி கடந்த 4 ஆண்டுகளாக, எந்த குறையும் இன்றி ஆட்சி நடத்தியுள்ளார். அவரே மீண்டும் முதல்வர் ஆவார். அதிமுக-வின் தேர்தல் அறிக்கை அமுதசுரபி, பாமக-வின் தேர்தல் அறிக்கை வளர்ச்சி ஆயுதம். திமுக-வின் தேர்தல் அறிக்கை காப்பி. இனி திமுக தேறாது, அதன் அத்தியாயம் முடிந்துவிட்டது. மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.