Last Updated : 02 Apr, 2021 03:12 AM

 

Published : 02 Apr 2021 03:12 AM
Last Updated : 02 Apr 2021 03:12 AM

களத்தில் 23 வேட்பாளர்கள்: வில்லிவாக்கத்தை கைப்பற்ற அதிமுக - திமுக தீவிரம்

வில்லிவாக்கம் தொகுதியில் 23 வேட்பாளர்கள் களத்தில் இருந்தாலும், அதிமுக, திமுக இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது.

ஒரு காலத்தில் மிகப்பெரிய தொகுதியாக இருந்த வில்லிவாக்கம், தொகுதி மறுசீரமைப்புக்குப் பிறகு மற்ற தொகுதிகளைப் போல சிறிதானது. ரயில் பெட்டி தயாரிப்பு தொழிற்சாலை, தனியார் தொழிற்சாலைகள் அமைந்துள்ள இத்தொகுதியில் உழைக்கும் மக்கள் அதிகம். இதுவரை நடைபெற்ற 10 தேர்தல்களில் திமுக 4 முறையும், அதிமுக , மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 2, காங்கிரஸ், தமாகா தலா ஒரு முறையும் வென்றுள்ளன.

தொகுதியில் பல பகுதிகள் ஆக்கிரமிப்பில் இருப்பதும், போதிய அடிப்படை வசதிகள் இல்லாததும், போக்குவரத்து நெரிசலும் இங்குள்ள மக்களின் நீண்டகால பிரச்சினைகளாக உள்ளன.

அதிமுக வேட்பாளர் ஜெ.சி.டி.பிரபாகர், 5-வது முறையாக வில்லிவாக்கத்தில் களம் காண்கிறார். இது அவருக்கு பலமாக அமைந்துள்ளது. 1980 மற்றும் 2011 தேர்தல்களில் வெற்றி பெற்றபோது தொகுதிக்கு செய்த பணிகளை எடுத்துக்கூறி அவர் பிரச்சாரம் செய்து வருகிறார். 2015-ம் ஆண்டு ஏற்பட்ட பெருவெள்ளத்தின்போது தான் மேற்கொண்ட பணிகளைப் பற்றி எடுத்துக்கூறியும் வாக்கு சேகரித்து வருகிறார்.

திமுக வேட்பாளரும், அக்கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் க.அன்பழகனின் பேரனுமான வெற்றியழகன், தான் வெற்றி பெற்றால் தரமான சாலைகள், சுகாதார வசதிகள், பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதி போன்ற உள்கட்டமைப்பு பணிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். சிட்கோ நகர் உட்பட மழைக்காலத்தில் மழைநீர் தேங்கும் பகுதிகளில் இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்படும் என்று கூறி வாக்கு சேகரித்து வருகிறார்.

தேமுதிக வேட்பாளர் சுபமங்களம் டெல்லிபாபு, தான் வெற்றி பெற்றால் மழைநீர் தேங்குவது, கழிவுநீர் வழிந்தோடுவது, போக்குவரத்து நெரிசல் போன்ற முக்கியப் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காணப்படும் என்று கூறி பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் ஹரன், தங்களது கட்சியின் பிரதான வாக்குறுதிகளான குடும்பத் தலைவிக்கு உதவித் தொகை, மாணவர்களுக்கு இலவச லேப்டாப், மொபைல் டேட்டா, வைபை வசதியுடன் வழங்கப்படும். மேலும் மிலிட்டரி கேன்டீன் போல தமிழக கேன்டீன் அமைத்து அனைத்துப் பொருட்களும் பாதி விலையில் விற்கப்படும் என்று சொல்லி வாக்கு சேகரிக்கிறார்.

நாம் தமிழர் கட்சி வேட்பாளர் இரா.தர், வில்லிவாக்கம் தொகுதி முழுவதும் இலவசமாக பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படும், நீண்டகாலமாக பட்டா இல்லாமல் அவதிப்படும் மக்களுக்கு 6 மாதங்களில் பட்டா பெற்றுத் தரப்படும் என்று வாக்குறுதி அளித்து வாக்கு சேகரித்து வருகிறார்.

இத்தொகுதியில் சுயேச்சை வேட்பாளர்களையும் சேர்த்து வில்லிவாக்கம் தொகுதியில் மொத்தம் 23 பேர் களத்தில் உள்ளனர். இருப்பினும் அதிமுக, திமுக இடையேதான் நேரடிப் போட்டி நிலவுவதாக தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x