

பாஜக- அதிமுக கூட்டணி தமிழகத்தை முன்னேற்றும் கூட்டணி என அரவக்குறிச்சியில் நேற்று நடைபெற்ற பிரச்சாரத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிடும் அக்கட்சியின் மாநில துணைத்தலைவர் அண்ணாமலையை ஆதரித்து பிரச்சாரம் செய்வதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று கரூர் மாவட்டத்துக்கு வந்தார்.
கரூர் மாவட்டம் தளவாபாளையம் எம்.குமாரசாமி பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற கட்சியின் வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசினார். பின்னர், அங்கிருந்து காரில் புகழூர் ஹைஸ்கூல் மேடு பகுதிக்கு வந்தார்.
பின்னர், அங்கிருந்து பிரச்சார வாகனத்தில் ஏறி சுமார் ஒரு கி.மீ தொலைவுக்கு ஊர்வலமாக சென்றார். அப்போது வழி நெடுகிலும் மக்கள் அவர் மீது ரோஜா மலர்களை தூவி வரவேற்றனர். அதன்பின், வேலாயுதம்பாளையம் ரவுண்டானா பகுதியில் அமித் ஷா பேசியது:
அரவக்குறிச்சி தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிடும் அண்ணாமலையை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும். ஊழல் காங்கிரஸ்- திமுக கூட்டணி மற்றும் ஊழலற்ற பாஜக- அதிமுக கூட்டணி என தமிழக மக்களுக்கு இரு வாய்ப்புகள் உள்ளன. பாஜக- அதிமுக கூட்டணி தமிழகத்தை முன்னேற்றும் கூட்டணி. எங்களின் லட்சியம் தமிழகத்தின் வளர்ச்சி மட்டுமே.
திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், தனது தந்தையை முதல்வராக்க வேண்டும் என்கிறார். தமிழகத்துக்கு வளர்ச்சி வேண்டுமா? உதயநிதி ஸ்டாலின் சொல்வது நடக்க வேண்டுமா? எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் ஆன்மாவின் ஆசி பெற்ற கூட்டணி பாஜக- அதிமுக கூட்டணி.
தமிழகத்துக்கு பல்வேறு வளர்ச்சிப் பணிகளுக்காக ரூ.1.60 லட்சம் கோடியை பிரதமர் மோடி வழங்கியுள்ளார். எனவே, வாக்காளர்கள் பாஜக- அதிமுக கூட்டணியை ஆதரிக்க வேண்டும். இந்தத் தொகுதியில் அண்ணாமலையை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றார்.
அப்போது, பாஜக மாநிலத்தலைவர் எல்.முருகன், வேட்பாளர் அண்ணாமலை, மாவட்டத் தலைவர் கே.சிவசாமி, எம்.பி மு.தம்பிதுரை, அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.