

திருவெறும்பூர் தொகுதி அதிமுக வேட்பாளர் ப.குமார் நேற்று எச்ஏபிபி, போலீஸ் காலனி, அண்ணாநகர், காவேரி நகர், இலந்தைபட்டி, காந்தலூர் உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது அவர் பேசியதாவது: திருச்சியின் துணை நகரத்தை நவல்பட்டு பகுதியை ஒட்டி அமைப்பது குறித்து அரசு ஆலோசித்து வருகிறது. ஏற்கெனவே இப்பகுதியில் மத்திய அரசின் பல்வேறு தொழில் நிறுவனங்கள், தனியார் தொழிற்சாலைகள், ஐ.டி பார்க் உள்ளிட்டவை செயல்படுகின்றன. இங்கு ஐ.டி பார்க்கை விரிவாக்கம் செய்வதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. போதுமான இடவசதி, போக்குவரத்து வசதிகள் இருப்பதால் இங்கு பன்னாட்டு தொழில் நிறுவனங்களைக் கொண்டு வர முயற்சி மேற்கொள்வேன். சர்வதேச விமானநிலையத்துக்கு அருகில் அமைந்துள்ளதால், எதிர்காலத்தில் இப்பகுதிதான் திருச்சியிலேயே வளர்ச்சியடைந்த பகுதியாக இருக்கும். என்னை வெற்றி பெற வைத்தால், அதற்கேற்ற திட்டங்களை நிச்சயம் பெற்றுத் தருவேன் என்றார்.
ஒன்றியச் செயலாளர்கள் ராவணன், கும்பகுடி கோவிந்தராஜ், நிர்வாகிகள் பாலமூர்த்தி, பொய்கைக்குடி முருகன், பூபதி, மூர்த்தி உள்ளிட்டோர் சென்றனர்.
அதைத்தொடர்ந்து திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் பலர், ப.குமாரைச் சந்தித்து தேர்தலில் தங்களது ஆதரவைத் தெரிவித்தனர். அப்போது ப.குமார், அவர்களுடன் இணைந்து ஆட்டோ ஓட்டி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.