ஊழலற்ற நிர்வாகம் மூலம் நஷ்டத்தில் உள்ள நிறுவனத்தை லாபகரமாக மாற்ற முடியும்: ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சகாயம் கருத்து

ஊழலற்ற நிர்வாகம் மூலம் நஷ்டத்தில் உள்ள நிறுவனத்தை லாபகரமாக மாற்ற முடியும்: ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சகாயம் கருத்து
Updated on
1 min read

மயிலாடுதுறை சட்டப்பேரவைத் தொகுதியில், சகாயம் அரசியல் பேரவை சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ராஜ்குமாரை ஆதரித்து, விருப்ப ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சகாயம் மயிலாடுதுறையில் நேற்று பிரச்சாரம் செய்தார். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியது:

2 ஆண்டுகளுக்கு முன்பு நடிகர் ரஜினிகாந்த், அவரது கட்சியில் என்னை சேர்த்து, முதல்வர் வேட்பாளராக முன்மொழிய தயாராக இருப்பதாக, எங்களின் அமைப்பைச் சேர்ந்த ஒருவர் மூலம் எனக்கு அழைப்பு விடுத்தார். ஆனால், நான் அதில் ஆர்வம் காட்டவில்லை.

கடந்த 5 ஆண்டுகளாக நடைபெற்ற ஆட்சி, ஊழல் நிறைந்த ஆட்சி. 84 சதவீத படிப்பறிவு கொண்ட மாநிலமான தமிழகத்தில், வெளிமாநிலத்தவருக்கு பணி வழங்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழகத்தின் வேலைவாய்ப்பை தமிழக இளைஞர்களுக்குத்தான் வழங்க வேண்டும்.

அதேபோல, நம்முடைய மக்களின் வரிப்பணத்தில் உருவாக்கப்பட்டுள்ள மருத்துவக் கல்லூரிகள் நம்முடைய சொத்து. எனவே, வெளிமாநிலங்களில் இருந்து வந்து, நம்முடைய மருத்துவ கட்டமைப்பு வசதிகளை பயன்படுத்திக்கொள்வதை நான் நிராகரிக்கிறேன். உலகிலேயே அதிக அளவிலான பாலிசி சந்தாதாரர்களைக் கொண்டுள்ள எல்ஐசி போன்ற பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு மத்திய அரசு தாரை வார்ப்பதை அனுமதிக்க முடியாது.

12 ஆண்டுகளாக நஷ்டத்தில் இயங்கி வந்த கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தை ஒரே ஆண்டில் லாபகரமான நிறுவனமாக மாற்றி, வந்த லாபத்தில் நெசவாளர்களுக்கு போனஸ் வழங்கினேன். நஷ்டத்தில் உள்ள நிறுவனத்தையும் ஊழலற்ற நிர்வாகத்தின் மூலமாக லாபகரமாக மாற்ற முடியும் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in