

நாகை மாவட்டம் வேதாரண்யம் தொகுதி அதிமுக வேட்பாளரான அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தலைஞாயிறு பேரூராட்சிக்குட்பட்ட வண்டல், குண்டூரான்வெளி, ஓரடியம்புலம், சின்னக்கடைத்தெரு, தலைஞாயிறு பேருந்து நிலையம், திருமாளம், பிரிஞ்சுமூலை, பழையாற்றங்கரை, சந்தானத் தெரு, லிங்கத்தடி, வேளாணிமுந்தல் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று வீதிவீதியாகச் சென்று பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது, அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பேசியதாவது:
தலைஞாயிறு பேரூராட்சிக்குட்பட்ட பாலசமுத்திரகுளத்தில் ரூ.2 கோடியில் நான்கு கரைகளிலும் சுற்றுச்சுவர் கட்டப்பட்டு, மேம்பாடு செய்யப்பட்டுள்ளது. பழையாற்றங்கரையில் ரூ.3 கோடியில் சாலை அமைக்கப்பட்டுள்ளது. தலைஞாயிறு ஒன்றியத்தில் துளசாபுரம், மகாராஜபுரம், சாக்கை உள்ளிட்ட பகுதிகளுக்கு புதிதாக குடிநீர் இணைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
வேதாரண்யம் பகுதியில் இதுவரை சுமார் ரூ.2,500 கோடி மதிப்பில் நலத்திட்ட பணிகள் நடைபெற்று உள்ளன. 6 இடங்களில் உயர்மட்ட பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வெள்ளப்பள்ளத்தில் படகுகளை நிலை நிறுத்துவதற்கான துறைமுகம் அமைக்கும் பணி ரூ.100 கோடி மதிப்பில் நடைபெற்று வருகிறது. ஓரடியம்புலத்தில் ரூ.83 கோடியில் மீன்வள பல்கலைக்கழக உறுப்புக்கல்லூரி தொடங்கப்பட்டுள்ளது. ரூ.570 கோடியில் அடப்பாறு, பாண்டவையாறு, வளவனாறு, அரிச்சந்திர ஆறு தடுப்புச்சுவர் அமைக்கும் பணி நடைபெற்று உள்ளது.
இதேபோல, பல்வேறு நலத்திட்டங்கள் வேதாரண்யம் தொகுதியில் தொடர, இரட்டை இலை சின்னத்தில் எனக்கு வாக்களிக்க வேண்டும் என்றார்.
பிரச்சாரத்தில், அதிமுக பேரூர் செயலாளர் பிச்சையன், ஒன்றியச் செயலாளர்கள் அவை.பாலசுப்பிரமணியன், தங்க.சவுரிராஜன் மற்றும் கூட்டணி கட்சியினர் திரளாக கலந்துகொண்டனர்.