Published : 02 Apr 2021 03:14 AM
Last Updated : 02 Apr 2021 03:14 AM

கன்னியாகுமரியில் பிரதமர் மோடி இன்று பிரச்சாரம்: மாவட்டம் முழுவதும் 3 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு

நாகர்கோவில்

கன்னியாகுமரியில் பிரதமர்நரேந்திர மோடி இன்று தேர்தல்பிரச்சாரம் மேற்கொள்கிறார். மாவட்டம் முழுவதும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் பாஜகவேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணன், கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் பாஜக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, பிரதமர் மோடி கன்னியாகுமரி அருகே அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி வளாகத்தில் இன்று (2-ம் தேதி) மாலை 4 மணிக்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

முன்னதாக மதுரை பிரச்சார கூட்டத்தில் பங்கேற்கும் பிரதமர், அங்கிருந்து கேரள மாநிலம் பத்தனம்திட்டா செல்கிறார். அங்கிருந்து திருவனந்தபுரம் வரும்அவர், ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வருகிறார். அங்கிருந்து கார் மூலம் அருகே உள்ள அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி வளாகத்துக்கு வருகிறார்.

பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று முதல் பலத்தபோலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

கடந்த இரு நாட்களாக அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி வளாகம் போலீஸாரின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. அங்கு மோப்பநாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தினர்.

கன்னியாகுமரியில் உள்ள ஓட்டல்கள், தங்கும் விடுதிகள் அனைத்திலும் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது. வெளியூர்களில் இருந்து வரும் நபர்கள் குறித்த விவரங்களை உடனடியாக போலீஸாருக்கு தெரியப்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. களியக்காவிளை முதல் கன்னியாகுமரி வரை வாகனங்கள் அனைத்தும் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டன. கன்னியாகுமரி கடல் பகுதியில் மெரைன் போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து டெல்லியில் இருந்து வந்துள்ள மத்தியபாதுகாப்பு அதிகாரிகள் போலீஸாருடன் ஆலோசனை மேற்கொண்டு பாதுகாப்பை துரிதப்படுத்தியுள்ளனர். மத்திய, மாநில உளவுப்பிரிவினர் கன்னியாகுமரி, நாகர்கோவில், களியக்காவிளை, காவல்கிணறு மற்றும் முக்கிய பகுதிகளில் முகாமிட்டுள்ளனர்.

வேட்பாளர்கள் மற்றும் மேடையில் பங்கேற்கும் நிர்வாகிகளுக்கு கரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. உள்ளூர் மற்றும் வெளியூர் போலீஸார் என 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதுபோல், நாளை (3-ம் தேதி) காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, பாஜக தலைவர் நட்டா, மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் ஆகியோரும் குமரி மாவட்டம் வருவதால், குமரியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மதுரை பிரச்சார கூட்டத்தில் பங்கேற்கும் பிரதமர், அங்கிருந்து கேரள மாநிலம் பத்தனம்திட்டா செல்கிறார். அங்கிருந்து திருவனந்தபுரம் வரும் அவர், ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வருகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x