

மதச்சார்பற்ற கூட்டணி கட்சியினருக்கு இடையே வெவ்வேறு கொள்கைகள் இருந்தாலும் பாஜக கூட்டணி வைத்துள்ள அதிமுக அரசு அகற்றப்பட வேண்டும் என்பதில் மாறுபாடு இல்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் தெரிவித்தார்.
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் எம்.சின்னதுரையை ஆதரித்து கறம்பக்குடியில் இன்று (மார்ச் 1) இரவு அவர் பேசியது:
நாட்டில் அரசியல் சாசன சட்டத்துக்கும், இந்திய ஜனநாயகத்துக்கும் 2-வது முறையாக ஆபத்து வந்துள்ளதாக கருதுகிறோம். ஆர்எஸ்எஸ் என்று சொல்லக்கூடிய அமைப்பின் ஒரு பிரிவுதான் பாஜகவே தவிர, அது ஒரு அரசியல் கட்சி அல்ல.
நாடு சுதந்திரம் அடைந்ததை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதோடு, சுதந்திர போராட்டத்தில் பங்கேற்கவும் இல்லை. அனைவருக்கும் பொதுவான நம் அரசியல் சாசன சட்டம் மத சார்பற்றதாக இருப்பதால் இதை பாஜக ஒருபோதும் ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை.
நாட்டில் முக்கிய பிரச்சினையாக இருந்து வரும் விலைவாசி உயர்வு, விவசாயிகள், விவசாயத்துக்கான பிரச்சினை குறித்து பாஜகவினர் பேசுவதில்லை. மதம், இனம் சார்ந்து பேசுவதைபே அவர்கள் குறிக்கோளாக கொண்டுள்ளனர்.
யூனியன் பிரதேசங்களில் அதிகாரங்கள் குறைக்கப்பட்டுள்ளன. ஒரு நாடு, ஒரு தேர்தல் நடத்த வேண்டும் என்கிறார் பிரதமர் மோடி.
அப்படி நடக்குயெனில் ஒரு மாநிலத்தில் ஏதோ ஒரு காரணத்துக்காக ஆட்சி டிஸ்மிஸ் செய்யப்படுமேயானால் அடுத்து அந்த ஆட்சிகாலம் முடியும்வரை தேர்தல் நடைபெறாது. கவர்னரே ஆட்சி செய்வார். இதை எப்படி ஏற்பது?.
பாஜகவினர் கூறுவது போன்று எல்லாவற்றையும் ஒன்றாக்கினால் தமிழகத்தில் பொங்கல் பண்டிக்குப் பதிலாக ஹோலி பண்டிகையும், தமிழ்மொழிக்குப் பதிலாக இந்தியும்தான் முதன்மையாக்கப்படும்
ஆபத்தை சந்தித்து வரும் ஜனநாயகம், அரசியல் சாசன சட்டம், சாதி மத ஒற்றுமையை பாதுகாக்க வேண்டிய தருணம் என்பதால் மிக முக்கிய தேர்தலாக பார்க்கப்படுகிறது.
திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பல்வேறு கட்சியினருக்கு பல்வேறு கொள்கைகள் வெவ்வேறாக இருந்தலும் பாஜக கூட்டணி வைத்துள்ள அதிமுக அகற்றப்பட வேண்டும் என்பதில் மாறுபாடு கிடையாது.
நீட் தேர்வை ஒரு ஆண்டுக்கு தள்ளி வைக்க வேணடும் என்று அதிமுக அரசு கோரியதே ஏன் பாஜக ஏற்கவில்லை?. உலகில் எந்த நாட்டிலும் தேர்வு எழுதாமல் தேர்ச்சி அறிவித்த ஒரே அரசு அதிமுக அரசுதான்.
தமிழக மாணவர்களின் கல்வி சீரழிக்கப்பட்டுள்ளது என்றார்.