

தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், தேர்தல் ஆணையம் அதிரடியாக ஆட்சியர், ஐபிஎஸ் அதிகாரிகளை மாற்றி வருகிறது. கடந்த 10 நாட்களாக முக்கிய அதிகாரிகளை மாற்றி உத்தரவிட்ட தேர்தல் ஆணையம், நேற்று 2 மண்டல ஐஜிக்களை மாற்றிய நிலையில் இன்று கரூர் ஆட்சியர், எஸ்.பி.யை மாற்றி உத்தரவிட்டுள்ளது.
கடந்த வாரம் தென் மண்டல ஐஜியை மாற்றி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. பின் கோவையில் பணம் பிடிபட்ட விவகாரத்தில் மாவட்ட ஆட்சியர், காவல் ஆணையரை மாற்றித் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இந்நிலையில் திருச்சியில் காவல் நிலையத்தில் பணம் வழங்கப்பட்டதாக எழுந்த விவகாரத்தில் திருச்சி காவல் ஆணையர் லோகநாதன் இடமாற்றம் செய்யப்பட்டு தலைமையிடத்தில் பணிகள் எதுவும் இல்லாமல் வைக்கப்பட்டார்.
இந்நிலையில் நேற்று மாலை மத்திய மண்டல ஐஜி ஜெயராம், மேற்கு மண்டல ஐஜி தினகரன், கோவை ரூரல் எஸ்.பி. அருளரசு ஆகியோரை மாற்றத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மாற்றப்பட்ட மேற்கு மண்டல ஐஜி தினகரன், மத்திய மண்டல ஐஜி ஜெயராம், கோவை ரூரல் எஸ்.பி. அருளரசு ஆகியோரைத் தேர்தல் ஆணைய உத்தரவின்றி வேறு பணியில் நியமிக்காமல் தலைமையிடத்தில் பணி இல்லாமல் வைத்திருக்க உத்தரவிட்டுள்ளது.
இன்று மதியம் திருப்பத்தூர் டிஎஸ்பி, அமைச்சர் கே.சி.வீரமணி ஆதரவாளர்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் தாமதித்ததாக சிறப்பு தேர்தல் பார்வையாளர் புகாரில் அதிரடியாக மாற்றப்பட்டார். இந்நிலையில் இன்று கரூர் மாவட்ட ஆட்சியர், எஸ்.பி. உள்ளிட்டோரை மாற்ற தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
ஆட்சியர் மலர்விழி, எஸ்.பி., எஸ்.எஸ்.மகேஸ்வரன்
தேர்தல் ஆணையச் செயலர் மலாய் மாலிக் தமிழக தலைமைச் செயலருக்கு அனுப்பியுள்ள உத்தரவு வருமாறு.
கரூர் மாவட்ட ஆட்சியர் மலர்விழி மாற்றப்பட்டு தேர்தல் அல்லாத பணியில் நியமிக்கப்பட வேண்டும்.
கரூர் மாவட்ட ஆட்சியராக பிரசாந்த் மு.வடநேரே நியமிக்கப்படுகிறார்.
கரூர் மாவட்ட எஸ்.பி., எஸ்.எஸ்.மகேஸ்வரன் மாற்றப்பட்டு தேர்தல் அல்லாத பணியில் நியமிக்கப்பட வேண்டும்.
கரூர் மாவட்ட எஸ்.பி.யாக மயிலாப்பூர் துணை ஆணையர் செஷாங் சாய் நியமிக்கப்படுகிறார்.
காலியாக உள்ள கோவை தலைமையிடத் துணை ஆணையராக ஜெயச்சந்திரன் நியமிக்கப்பட வேண்டும்.
மேற்கண்ட உத்தரவுகள் உடனடியாக நிறைவேற்றப்படவேண்டும்.
இவ்வாறு அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.