தமிழகத்தில் ஆளுங்கட்சியினரின் பணவிநியோகத்தை தடுக்க வேண்டும்: மார்க்சிஸ்ட் கம்யூ மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்

தமிழகத்தில் ஆளுங்கட்சியினரின் பணவிநியோகத்தை தடுக்க வேண்டும்: மார்க்சிஸ்ட் கம்யூ மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்

Published on

தமிழகத்தில் ஆளுங்கட்சியினரின் பணவிநியோகத்தைத் தடுக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

கோவையில் உத்தரப் பிரதேச முதல்வர் பங்கேற்ற பேரணியின்போது பாஜகவினர் கலவரத்தைத் தூண்ட முயற்சித்தது அதிர்ச்சியாக உள்ளது.

தமிழகத்தில் இதுவரை தேர்தல் களம் அமைதியாக இருந்த நிலையில் பாஜக அதைக் கெடுக்கும் வகையில் செயல்பட்டுள்ளது கண்டனத்துக்குரியது.

தமிழகம் முழுவதும் அதிமுக பாஜக எதிர்ப்பு அலை உருவாகியிருக்கிறது. மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். பாஜகவுடன் கூட்டணி வைத்துக்கொண்டதன் மூலம் அதிமுகவினர் தங்களுக்கே குழி வெட்டிக்கொண்டனர்.

அதிமுகவினர் பல்வேறு இடங்களில் பணவிநியோகத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். பணபலத்தை நம்பியே அதிமுக தேர்தலில் நிற்கிறது. ஆனால் அது நடக்காது.

பணவிநியோகத்தை தடுக்க தேர்தல் ஆணையம் கடும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். ஒவ்வொரு தேர்தலின்போதும் வாக்குப்பதிவுக்கு 2 நாட்களுக்குமுன் தேர்தல் ஆணையம் எங்கு இருக்கிறது என்றே தெரியாத நிலை காணப்படும்.

அந்நிலை இந்த தேர்தலிலும் இருக்காமல் தேர்தல் ஆணையம் விழிப்புடன் செயல்பட வேண்டும். பணத்தை மையப்படுத்தி தேர்தலை நடத்துவது நல்லதல்ல

தாதா சாகேப் பால்கே விருது பெற்றுள்ள ரஜினிகாந்துக்கு எங்கள் கட்சி சார்பில் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். அவரது உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரமாக இது அமைந்துள்ளது.

அதேநேரத்தில் தேர்தலுக்கு சில நாட்களுக்குமுன் இந்த விருது அறிவிப்பு வந்துள்ளது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. ஆ. ராசா விவகாரம் முடிந்துபோன பிரச்சினை.

அதற்காக அவரும் மன்னிப்பு கேட்டுள்ளார். அப்படிப் பேசியிருக்கக் கூடாது என்று திமுக தலைவரும் தெரிவித்துவிட்டார். இப்போது தேர்தல் ஆணையம் பிரச்சாரத்துக்கு தடை விதித்திருப்பது, அதை எதிர்த்து நீதிமன்றம் செல்வது என்றெல்லாம் அதை மீண்டும் கிளறுவது தேவையற்றது.

தமிழகத்தில் 6 தொகுதிகளில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது. கருத்து கணிப்புகள் எல்லாம் நிஜமாக இருக்கும் என்று சொல்ல முடியாது.

கடந்த மக்களவைத் தேர்தல் வெற்றியைவிட அதிகமாகவே திமுக கூட்டணி வெற்றி இத்தேர்தலில் இருக்கும் என்று தெரிவித்தார். கட்சியின் திருநெல்வேலி மாவட்டச் செயலாளர் கே.ஜி. பாஸ்கரன் உடனிருந்தார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in